ஆன்மிகம்
தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோவில்

திருமண தடை நீக்கும் திருத்தலங்கள்

Published On 2020-06-19 02:12 GMT   |   Update On 2020-06-19 02:12 GMT
திருமணம் தடைப்படுவர்கள் வழிபடவேண்டிய சில கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் வழிபாடு செய்தால் நிச்சயம் திருமண விரைவில் நடைபெறுவது உறுதி.
கருமாரியம்மன்

திருவேற்காட்டில் உள்ள தேவி ஸ்ரீகருமாரியம்மன், மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக கருதப்படுகிறாள். இந்த அம்மன், திருமணத்தடைகளை தகர்த்தெறியும் சக்தி படைத்தவளாகவும் திகழ்கிறாள். தன் பக்தர்களின் எதிரிகளை விலகச் செய்யும் இந்த அன்னை, திருமணத் தடையையும் அகற்றுவது சிறப்பம்சமாகும். இந்த தேவியை வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள். சென்னையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவேற்காடு.

திருப்பரங்குன்றம்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானது திருப்பரங்குன்றம். இங்கு தான் முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. எனவே இந்த ஆலயமும் திருமண வரம் அருளும் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் செவ்வாய் தோஷத்தால் திருமணம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்தால், தோஷம் நீங்கி விரைவிலேயே திருமணம் நடைபெறும். ஏனெனில் செவ்வாய் எனப்படும் அங்காரகனின் அதிதேவதையாக முருகப்பெருமான் இருக்கிறார். எனவே இங்கு வந்து வழிபட்டால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

உத்திரகோச மங்கை

ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கே சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உத்திரகோசமங்கை திருத்தலம். இங்கு மங்கல நாயகி உடனாய மங்கலநாதர் திருக்கோவில் இருக்கிறது. இத்தல இறைவனும் இறைவியும் சுயம்புவாகத் தோன்றியவர்கள். இத்தல இறைவனை யும் இறைவியையும் வழிபடுவதோடு, இங்குள்ள லிங்கங்கள் அனைத்தையும் வழிபட்டால், திருமணத்தடை தவிடுபொடியாகும் என்பது ஐதீகம். ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 71 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் திருத்தலம் உள்ளது.

அமிர்தகடேஸ்வரர்

மேல்கடம்பூர் என்ற ஊரில் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் ஒருவராக விளங்கும் அங்காரகன் இந்த ஆலயத் திற்கு வந்து இறைவனை வழிபட்டு, தன்னுடைய சாபத்தை போக்கிக் கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. எனவே இது ஒரு செவ்வாய்தோஷ நிவர்த்தித் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வந்து அமிர்தகடேஸ்வரரை வழிபட்டுச் சென்றால், திருமணத் தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் இருந்து தென்மேற்கே, கொள்ளிடம் ஆற்றுப்பக்கம் 5 கிலோமீட்ட சென்றால், மேல்கடம்பூரை அடையலாம்.

நித்ய கல்யாணப் பெருமாள்

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் திருக்கோவில், திருமணத் தடைநீக்கும் திருத்தலங் களில் முக்கியமானதாக உள்ளது. இங்குள்ள பெருமாளை வழிபடுபவர்களுக்கு, நிச்சயமாக விரைவிலேயே திருமணம் நடந்தேறும் என்பது அசைக்க முடியாத உண்மை. திருமணக் கோரிக்கை யோடு வரும் ஆண்களோ அல்லது பெண்களோ, இரண்டு பூமாலைகளுடன் தேங்காய், பழம், ஒரு நெய் தீபம் கொண்டு வர வேண்டும். பூஜை முடிந்தபிறகு, நீங்கள் அளித்த மாலைகளில் ஒன்றை அர்ச்சகர் திருப்பித் தருவார். அதை கழுத்தில் அணிந்தபடி ஆலய பிரகாரத்தை ஒன்பது முறை சுற்றிவர வேண்டும். பின் மாலையை வீட்டிற்கு கொண்டுவந்து பத்திரமாக வைக்க வேண்டும். விரைவில் திருமணம் முடிந்ததும் அந்த மாலையை கொண்டுவந்து, ஆலயத்திற்கு பின்புறம் உள்ள புன்னை மரத்தில் கட்டிவிட வேண்டும். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை வரும் வழியில் 16 கிலோமீட்டர் தூரத்தில் திருவிடந்தை உள்ளது.

ஷோடச கணபதி

திருப்பாசூர் என்ற இடத்தில் ஷோடச கணபதிகள் வீற்றிருக்கின்றனர். ஷோடச கணபதி என்பது 16 வகையான விநாயகர் களைக் குறிப்பிடுவதாகும். இந்த ஆலயம் செவ்வாய் தோஷம் நீக்கும் திருத்தலமாக திகழ்கிறது. அதே நேரம், இங்குள்ள விநாயகர்களை, வளர்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்தால், திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடந்தேறும். திருவள்ளூரில் இருந்து மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் திருப்பாசூர் திருத்தலம் உள்ளது.

பொத்தநாகபுடி

சோளிங்கரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், பொத்தநாகபுடி என்ற கிராமம் உள்ளது. இங்கு நாகநாதேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமானும், நாகவல்லி என்ற பெயரில் அம்பாளும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். முன்காலத்தில் நாகம் வழிபட்ட தலம் என்பதால் இந்த திருத்தலத்திற்கு, நாகபுடி என்ற பெயர் வந்திருக்கிறது. இறைவனின் திருநாமும் நாகேஸ்வரர் என்றானது. இந்த ஆலயம் சர்ப்ப தோஷத்தை மட்டுமின்றி, திருமணத் தடையை நீக்குவதிலும் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.
Tags:    

Similar News