ஆன்மிகம்
மோரேஷ்வர் திருக்கோவில்- மகாராஷ்டிரா

மோரேஷ்வர் திருக்கோவில்- மகாராஷ்டிரா

Published On 2020-06-18 02:08 GMT   |   Update On 2020-06-18 02:08 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் மோர்காவ் என்ற இடத்தில் உள்ளது மோரேஷ்வர் திருக்கோவில். இது ‘மயூரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அஷ்ட விநாயகர் கோவில்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் மோர்காவ் என்ற இடத்தில் உள்ள மோரேஷ்வர் திருக்கோவில். இது ‘மயூரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறது. முன் காலத்தில் இந்தப் பகுதியில் மயில்கள் அதிகமாக இருந்ததால் ‘மோர்காவ்’ என்ற பெயர் வந்தது. அதுமட்டுமல்ல இந்த ஊரும் மயிலைப்போன்ற தோற்றத்தையே கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ‘மோர்’ என்றால் ‘மயில்’ என்றும், ‘காவ்’ என்றால் ‘கிராமம்’ என்றும் பொருள்.

கண்டமீகி என்னும் பகுதியை சக்கரபாணி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். மிகச் சிறந்த ஆட்சியைக் கொடுத்த அந்த அரசனுக்கு, நெடுநாளாக குழந்தை பாக்கியம் இல்லை. ஒருநாள் மன்னனின் அரண்மனைக்கு வந்த துறவி, அவனிடம் சூரிய பகவானுக்கு பூஜை செய்யும்படி கூறினார்.

அரசனும் அவ்வாறே செய்ய, சில மாதங்களில் அரசனின் மனைவி கர்ப்பம் தரித்தாள். ஆனால் சூரியனின் அம்சமாக உருவான அந்தக் குழந்தையின் கர்ப்பத்தை தாங்க முடியாமல், அரசனின் மனைவி தவித்தாள். அவள் அந்த கர்ப்பத்தை சமுத்திரத்தில் விட்டாள். அது ஒரு அழகான, பலசாலியான குழந்தையாக உருவெடுத்தது. சமுத்திரராஜன், அந்தணர் உருவெடுத்து அந்தக் குழந்தையை மீட்டு அரசனிடம் ஒப்படைத்தான்.

அரசன் அந்தக் குழந்தைக்கு, சிந்து என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். சிந்து, வாலிபப் பருவம் அடைந்ததும், சுக்ராச்சாரியாரின் உபதேசப்படி, சூரியனை வழிபாடு செய்து வந்தான். அவனது தவம் இரண்டாயிரம் வருடம் நீண்டது. இதைஅடுத்து சிந்துவின் முன்பாக வந்து தோன்றினார், சூரிய பகவான்.

சிந்து அவரிடம், “இறவாத வரம் வேண்டும்” என்று கேட்டான். அதற்கு சூரியன், அமிர்தத்தால் செய்யப்பட்ட உணவை அளித்து, “இது உன் வயிற்றில் இருக்கும் வரை நீ இறக்கமாட்டாய்” என்று கூறி மறைந்தார்.

வரம் கிடைத்ததும் ஆணவமும் குடிகொண்டுவிட்டது சிந்துவுக்கு. அவன் புத்தி தடுமாறி, கர்வத்தினால் எல்லோரையும் அழிக்க ஆரம்பித்தான். தேவர்களையும் தோற்கடித்து சிறையில் அடைத்தான். இதனால் தேவர்கள் அனைவரும், கணேசரை நினைத்து வழிபாடு செய்தனர். விநாயகரும், சிந்துவுடன் போரிட்டு தேவர்களை காக்க எண்ணினார். அதன்படி சிந்துவுடன் போரிட்டார். சிந்து தனது சேனாதிபதி கமலாசுரனுடன் சேர்ந்து விநாயகரை கடுமையாக எதிர்த்தான்.

உக்கிரமாக நடந்த இந்தப் போரில் சிந்துவையும், கமலாசுரனையும் வதம் செய்தார் விநாயகர். அதில் கமலாசுரனின் உடலை மூன்று பாகங் களாக்கி வீசினார். அதில் தலை விழுந்த இடம்தான் ‘மோர்காவ்’. விநாயகர் மயில் மீது அமர்ந்து போரிட்டதால் இந்தப் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

இந்த ஆலயத்தைச் சுற்றி நான்கு தூண்கள் உள்ளன. முக்கிய நுழைவுவாசல் அருகே ஆமை யின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அடுத்து விநாயகரை நோக்கியபடி நந்தி உள்ளது. இத்தல விநாயகரின் வாகனமான மூஷிகம், தன் இரு கைகளிலும் லட்டு ஏந்தியவாறு உள்ளது. இங்குள்ள மூல விக்கிரகம் மிகவும் அழகானது. விநாயகரின் துதிக்கை இடதுபக்கமாக திரும்பியுள்ளது. அவரது முகமோ கிழக்கு நோக்கி உள்ளது. விநாயகரின் தலைக்கு மேல், ஆதிசேஷன் தன்னுடைய படத்தை விரித்துக் கொண்டிருக்கிறது. விநாயகரின் இருபக்கமும் சித்தி- புத்தி இருவரும் உள்ளனர்.

இந்தக் கோவிலில் மூன்று கால பூஜை நடக்கிறது. ஆலயம் காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக திறந்து வைக்கப்பட்டிருக்கும். மோர்காவ் கிராமம், புனேவில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
Tags:    

Similar News