ஆன்மிகம்
நவக்கிரகம்

சென்னையில் உள்ள நவக்கிரக தலங்கள்

Published On 2020-06-17 02:18 GMT   |   Update On 2020-06-17 02:18 GMT
சென்னை பெருநகரைச் சுற்றிலும் நவக்கிரக தலங்கள் இருப்பது விசேஷமானதாகும். அந்த தலங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்..
நவக்கிரகங்களான சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்ரன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியவற்றுக்கான சிறப்பு தலங்கள், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ளன. அதே போல் சென்னை பெருநகரைச் சுற்றிலும் நவக்கிரக தலங்கள் இருப்பது விசேஷமானதாகும். அந்த தலங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்..

கொளப்பாக்கம்

கொளப்பாக்கத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயம், சூரியனுக்குரிய தலமாக போற்றப்படுகிறது. இந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை, முன்காலத்தில் சூரிய பகவான் வழிபாடு செய்ததாக புராணங்கள் சொல்கிறது. சென்னையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் குன்றத்தூர் செல்லும் சாலையில் இந்த திருத்தலம் உள்ளது.

சோமமங்கலம்

சென்னை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சோமமங்கலம் உள்ளது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான திருக்கோவிலாக, இங்குள்ள சோமநாதீஸ்வரர் திருக்கோவில் திகழ்கிறது. தட்சனின் சாபத்தால் சந்திரன் தேய்ந்தான். அவன் இங்குள்ள வினைத் தீர்த்தம் என்ற குளத்தில் நீராடி, லிங்கம் ஒன்றை நிறுவி வழிபாடு செய்தான். இதனால் இது சந்திரனுக்குரிய தலமாக விளங்குகிறது. பிராட்வே, காஞ்சிபுரம், குன்றத்தூர் ஆகிய பஸ்நிலையங்களில் இருந்து சோமமங்கலத்திற்கு நேரடி பஸ் வசதிகள் உள்ளன.

பூந்தமல்லி

பூந்தமல்லியில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. சோழர்களால் கட்டப்பட்ட 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. நவக்கிரக தலங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் தலமாக இது விளங்குகிறது. செவ்வாய்க்கிழமை அன்று ராகு கால நேரத்தில் அங்காரகனுக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் மாவிளக்கு தீபம் ஏற்றுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம். சென்னையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது. சென்னையின் அனைத்து பகுதியில் இருந்தும் பூந்தமல்லிக்கு பஸ்வசதி உள்ளது.

கோவூர்

சென்னையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கோவூர். இங்கு சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும். பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடல்பெற்றது இந்தத் தலம். நவக்கிரகங்களில் ஒன்றான புதனுக்குரிய வழிபாடு இங்கு நடக்கிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் வில்வ இலையால் ஈசனை பூஜிப்பது இங்கு விசேஷம்.

போரூர்

சென்னை- பெங்களூரு சாலையில் அமைந்துள்ளது போரூர் திருத்தலம். இங்குள்ள ராமநாதீஸ்வரர் கோவில் 800 ஆண்டுகள் பழமையானது ஆகும். சீதையைத் தேடிவந்த ராமபிரான், இத்தலத்தில் 48 நாள் தங்கி விரதம் இருந்து, பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. சிவபெருமானை, குருவாக பாவித்து ராமர் வழிபட்டதால், நவக்கிரக தலங்களில் இது குரு தலமாக விளங்குகிறது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போரூருக்கு நேரடி பஸ்வசதி உண்டு.

கெருகம்பாக்கம்

சென்னையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கெருகம் பாக்கம். இங்குள்ள திருநீலகண்டேஸ்வரர் கோவில், சோழர்களால் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். நவக்கிரகங்களில் கேதுவுக்குரிய தலமாக இது விளங்குகிறது. போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் அனைத்து பஸ்களும் கெருகம்பாக்கத்தில் நின்று செல்லும்.

குன்றத்தூர்

சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, குன்றத்தூர் திருநாகேஸ்வரர் திருக்கோவில். இது முதலாம் குலோத்துங்கச் சோழனால் கி.பி. 1070-ல் கட்டப்பட்டது. நவக்கிரக தலங்களில் இது ராகுவுக்குரிய தலமாக திகழ்கிறது. இங்கு ராகு பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

பொழிச்சலூர்

பொழிச்சலூரில் உள்ள அகஸ்தீஸ்வரம் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயம் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டது. அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் இங்கு உள்ளது. இது சனி பகவானுக்குரிய திருத்தலமாக விளங்குகிறது. பல்லாவரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் இந்த திருத்தலம் உள்ளது. தாம்பரத்தில் இருந்து பொழிச்சலூருக்கு ஏராளமான பஸ்வசதி உள்ளது.

மாங்காடு

சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மாங்காடு என்ற ஊரில் வல்லீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயம், நவக்கிரகத் தலங்களில் சுக்ரனுக்குரியதாக விளங்குகிறது. அசுரர்களின் குருவாக விளங்கிய சுக்ரன், இங்கு ஈசனை வணங்கியதால், இத்தலத்தில் சுக்ர வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாங்காடு காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் இந்த ஆலயம் உள்ளது. சென்னை மற்றும் தாம்பரம் பகுதிகளில் இருந்து இந்த ஊருக்கு செல்ல ஏராளமான பஸ்வசதி உள்ளது. 
Tags:    

Similar News