ஆன்மிகம்
அம்மையப்பநல்லூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்

அம்மையப்பநல்லூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்

Published On 2020-06-06 02:14 GMT   |   Update On 2020-06-06 02:14 GMT
காஞ்சிக்கு அருகிலுள்ள உத்திரமேரூரில் உள்ள அம்மையப்பநல்லூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி ஸமேதனாக ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்.
தொண்டை மண்டலமான காஞ்சிக்கு அருகிலுள்ள உத்திரமேரூரிலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் மேற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மையப்பநல்லூர் என்னும் சிற்றூர். அந்த கிராமத்தின் நடுவே ஸ்ரீதேவி பூதேவி ஸமேதனாக ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அழகான சிறிய கோவில். ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் வடக்கு நோக்கிய திருமுக மண்டலம்; நின்ற திருக்கோலம். வெளியில் கல்லாலான கொடிமரம். அடுத்ததாக சிறிய கருடன் சன்னதி. அழகாக புன்னகையோடு கூப்பிய கைகளோடே கருடன் சேவை சாதிக்கிறார். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சன்னதி என்றாலும், போதிய பராமரிப்பு இல்லாததால் மிகவும் சிதிலமடைந்து மிகவும் வருந்ததக்க நிலையில் உள்ளது. கோவில் முழுவதும் செங்கல்லால் ஆனது.

இடையில் எந்த திருப்பணிகளும் செய்யாததால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயமுள்ளது. ஏற்கனவே சன்னிதியின் ஒருபக்க சுற்றுசுவர் முற்றிலும் இடிந்துவிழுந்துள்ளது. கோவிலை சுற்றிலும் செடிகளும் புதர்களும் சூழ்ந்துள்ளன. முன்னொரு காலத்தில் உத்ஸவங்கள் சிறப்பாக நடைபெற்றதற்கு ஆதாரமாக சிதிலிமடைந்த கருடவாஹனம் இன்றும் உள்ளது. உத்ஸவங்கள் நின்று, நித்திய திருவாராதனம் குறைந்துபோனாலும், இந்த பெருமாளுக்கு தினமும் விளக்கேற்றி இன்றளவும் இந்த கோவிலை பாதுகாத்து வருகிறார் ஒரு மூதாட்டி. பெருமாளின் மீது அவர்களுக்கு இருக்கும் பக்தியை நாம் என்னவென்று சொல்வது!!!

உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீநவநீதகிருஷ்ணனாக வெண்ணைக்காடும் கண்ணனாக எழுந்தருளியுள்ளார். பாதுகாப்பு காரணம் கருதி உற்சவர் அருகிலுள்ள விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளார். கோவிலுக்கு சற்று மேற்கே சக்கரத்தாழ்வார் எழுந்தருளியுள்ளார். சன்னதிக்கு பின்புறம் அழகான கிணறு ஒன்று அமைந்துள்ளது. அதற்கு அருகிலேயே திருமடப்பள்ளி இருந்ததாக நாம் அறிகிறோம்.

இந்த கிணற்றிலிருந்தே பெருமாளின் திருவாராதனத்திற்கு தீர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது. சுற்றியிருந்த மதில் சுவர்கள் எல்லாம் முற்றிலும் இடிந்து இருந்த இடம் தெரியாமல் உள்ளன. அழிவின் விளம்பில் உள்ள இந்த அழகான சன்னதி உடனடியாக திருப்பணிகளை எதிர்நோக்கியுள்ளது. எனவே இச்செய்தியை படிக்கும் ஆஸ்திக அன்பர்கள், சிதிலமடைந்த இத்திருக்கோவிலை புணரமைக்கும் பணிகளில் பங்குகொண்டு திருக்கோவில் மீண்டும் பொலிவுடன் திகழ்வதற்கு தங்களால் முடிந்த அளவு உதவிட வேண்டுகிறோம்.

அடியேன்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன்
+91-9994783677

மேலும் விவரங்களுக்கு,
திரு. மின்னல் ஸ்ரீதர்
+91-9789778749
Tags:    

Similar News