ஆன்மிகம்
உப்பிலியப்பன் திருக்கோவில்

‘திருவிண்ணகரம்’ எனப்படும் உப்பிலியப்பன் திருக்கோவில்

Published On 2020-06-05 02:06 GMT   |   Update On 2020-06-05 02:06 GMT
தஞ்சாவூர் அடுத்த திருநாகேஸ்வரத்திற்கு தெற்கே 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ‘திருவிண்ணகரம்’ எனப்படும் உப்பிலியப்பன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் அடுத்த திருநாகேஸ்வரத்திற்கு தெற்கே 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ‘திருவிண்ணகரம்’ எனப்படும் உப்பிலியப்பன் திருக்கோவில். இத்தல இறைவன், நிகரில்லாத பெருமாள் என்பதால், ‘ஒப்பிலியப்பன்’ என்று அழைக்கப்படுகிறார். சிலர் ‘உப்பிலியப்பன்’ என்றும் அழைப்பார்கள். உப்பு இல்லாத நைவேத்தியங்கள் படைக்கப்படுவதால் இந்த பெயர் ஏற்பட்டது. உப்பிலியப்பன் ஆலயத்தைப் பற்றி மேலும் சில விவரங்களை பார்க்கலாம்.

* இந்த ஆலயம், தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் எழுப்பப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. சுத்தானந்த விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கியபடி நின்ற கோலத்தில் உப்பிலியப்பன் அருள்பாலிக்கிறார். அருகில் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் நாச்சியார் அருள்புரிகிறார்.

* இந்த ஆலயத்தை பற்றியும், இங்குள்ள பெருமாளை போற்றியும் நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாசுரம் பாடியுள்ளனர். பேயாழ்வார் 2 பாசுரமும், நம்மாழ்வார் 11 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 34 பாசுரங்களும், பொய்கையாழ்வார் ஒரு பாசுரமும் பாடியிருக்கிறார்கள்.

* திருப்பதியில் உள்ள ஏழுமலையானுக்கு தனி சுப்ரபாதம் இருப்பதுபோல, இத்தல இறைவனுக்கும் தனியாக சுப்ரபாதம் இருக்கிறது. இதை இயற்றியவர், ராமதேசிகாசார்ய சுவாமிகள். தினமும் திருப்பள்ளி எழுச்சியின்போது, இந்த சுப்ரபாதம் ஒலிக்கவிடப்படும்.

* கருட பகவான், காவிரி, தர்ம தேவதை, மார்கண்டேயர் ஆகியோருக்கு, இந்த தலத்தில் பெருமுாள் காட்சி கொடுத்துள்ளார். இத்தல இறைவனை துளசி, சூரியன், சந்திரன் ஆகியோர் பூஜித்து பலன் பெற்றுள்ளனர்.

* உப்பலியப்பனை, துளசி இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பாத யாத்திரையாக இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் புண்ணியம் அடைவார்கள்.

* உப்பிலியப்பனின் கீழ் வலது கரம், தனது திருவடியை சுட்டிக்காட்டும் வகையில் இருக்கிறது. அந்த கரத்தில் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ என்ற கீதையின் சுலோகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘என்னை சரணடை, உன்னை பாதுகாக்கிறேன்’ என்று பொருள்.

* விஷ்ணு பகவான், பூதேவியை மணம் புரிந்த தலம் இது. மார்க்கண்டேயர், தன் மகளை விட்டு ஒருபோதும் பிரியக்கூடாது என்று பெருமாளுக்கு நிபந்தனை விதித்தார். எனவே அனைத்து விழாக்களிலும் பூதேவியுடன் இணைந்தே பவனி வருகிறார். வருடத்தில் ஒருமுறை, அதாவது நவராத்திரி உற்சவத்தில் அம்பு போடும் நிகழ்வின் போது மட்டும், உப்பிலியப்பன் தனது மனைவியை ஒரு மணி நேரம் பிரிவார். அந்த நேரத்தில் பூதேவி யாருக்கும் தரிசனம் தரமாட்டார். எனவே தாயார் சன்னிதி திரையிட்டு மறைக்கப்படும்.

* இத்தல பெருமாளுக்கு படைக்கப்படும், புளியோதரை, தயிர்சாதம், பொங்கல், வடை, முறுக்கு போன்ற நைவேத்தியங்களில் உப்பு போடப்படுவதில்லை. ஆனாலும் இந்த நைவேத்தியங்கள் சுவையாகவே இருக்கின்றன.

* இங்குள்ள சந்தான கிருஷ்ணனை, மடியில் எழச் செய்யும் சேவை தினமும் காலை 8.30 மணிக்கு நடைபெறும். குழந்தை இல்லாதவர்கள், இங்குள்ள பொய்கையில் நீராடி, நோன்பிருந்து அங்கப்பிரதட்சணம் செய்து சந்தான கிருஷ்ணனை மடியில் வைத்தபடி பெருமாளை வணங்கினால், விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
Tags:    

Similar News