ஆன்மிகம்

சித்திரவாடி ஸ்ரீலட்சுமிநரசிம்மர் கோவில்

Published On 2019-05-25 05:44 GMT   |   Update On 2019-05-25 05:44 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் - செய்யூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது சித்திரவாடி ஸ்ரீலட்சுமிநரசிம்மர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆந்திர மாநிலத்தில் அகோபிலத்தில் நவநரசிம்மர், சிங்கப்பெருமாள்கோயிலில் பாடலாத்ரி நரசிம்மர், பழைய சீவரத்தில் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் என நரசிங்கப்பெருமாள் பல தலங்களில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களைக் காத்தருள்கிறார். ‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை; அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும்’ என்பது ஆன்றோர் வாக்கு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் - செய்யூர் வழித்தடத்தில் அமைந்துள்ள சித்திரவாடி, மலைகள் நிறைந்த ஒரு சிறிய கிராமம். இங்குள்ள சிம்மகிரி மலையில் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் எழுந்தருளியுள்ளார். 250 படிகளைக் கடந்து சென்றால் சிங்கமுக வடிவில் அமைந்த நரசிம்மர் கோயில் நம் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது. இந்த தலத்தில் ஸ்ரீநரசிம்மர் லட்சுமிபிராட்டியைத் தன் மடிமீது அமர்த்தி அணைத்த கோலத்தில் தரிசனமளிக்கிறார். ஒரு கையில் சங்கும் மற்றொரு கையில் சக்கரமும் ஏந்தியிருக்கிறார்.  
 
2007ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது இந்த மலைக்கோயில். மலையில் ஆஞ்சநேயரின் அம்சமான குரங்குகள் ஏராளமாக காணப்படுகின்றன. ஆனால், இவை பக்தர்களை எந்தவிதத்திலும் தொந்தரவும் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குகைக்கு வெளியே ஒரு பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. குகையை ஒட்டி வெளிப்புறத்தில் ஸ்ரீலட்சுமிநரசிம்மருக்கு வலதுபுறத்தில் கருடாழ்வார், இடதுபுறத்தில் ஸ்ரீஆஞ்சநேயர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சித்திரவாடிக்கு வரும் வயதான பக்தர்கள் ஸ்ரீலட்சுமிநரசிம்மரைத் தரிசிக்க வசதியாக மலை அடிவாரத்தில் ஸ்ரீலட்சுமிநரசிம்மருக்கு ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

முதலில் கொடிமரமும் அதைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு பக்கத்தில் ஸ்ரீஆனந்தவல்லித் தாயார் , மற்றொரு பக்கத்தில் ஸ்ரீபாவன நரசிம்மர் அருகில் ஸ்ரீசனீஸ்வர பகவான் என தனித்தனி சந்நதிகள் உள்ளன. சனீஸ்வர பகவான், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சனிசிங்கனாப்பூர் சனீஸ்வரரை நினைவு படுத்துகிறார். இந்த திருத்தலம் நவகிரக தோஷ பரிகாரஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த வெகு அபூர்வமாக நவநரசிம்ம நவகிரகப்பீடம் அமைந்துள்ளது.

ஒன்பது கிரகங்களுக்கும் அதிபதியாக ஒன்பது நரசிம்மர்களுடன் நவகிரக சந்நதி திகழ்கிறது. இந்த நவகிரக பீடத்தை தரிசித்து பக்தர்கள் தம் நவகிரக தோஷத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். மலையடிவாரக் கோயிலுக்கு சற்று தொலைவில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் முதன் முதலில் அமைக்கப்பட்ட ஆலயம் இதுவாகும். ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் தானே விரும்பி ஆலயம் அமைத்துக் கொண்ட காரணத்தினால் இந்த இடம் ‘நயா திருப்பதி’ எனப்படுகிறது.

இங்கு பத்மாவதித் தாயாரும், பஞ்சமுக ஆஞ்சநேயரும் தனித்தனிச் சந்நதிகளில் எழுந்தருளியுள்ளனர். விநாயகர், தன்வந்திரி, ராகு-கேது, காளிங்க நர்த்தனக் கண்ணன் ஆகியோரையும் தரிசித்து மகிழலாம். ஸ்ரீலட்சுமிநரசிம்மர் திருக்கோயிலின் பின்புறத்தில் கிரிவலப்பாதையில் ஸ்ரீஏகாந்தஈஸ்வரர் என்ற பெயரில் இரட்டை லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற அமைப்பு வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் இந்தக் கோயிலிலேயே தங்கியிருந்து வழிபாடுகளை நடத்தி வைக்கிறார்கள்.

மதுராந்தகம் - செய்யூர் வழியில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோயில்கள் அமைந்துள்ளன. மதுராந்தகத்திலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. 
Tags:    

Similar News