ஆன்மிகம்

தனித்துவம் வாய்ந்த தோரணமலை முருகன் கோவில்

Published On 2019-04-13 01:17 GMT   |   Update On 2019-04-13 01:17 GMT
முருகன் வீற்றிருக்கும் “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
முருகன் வீற்றிருக்கும் “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. நெல்லை மாவட்டத்தில் இப்புண்ணிய மலை அமைந்துள்ளது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழித்தடத்தில் இத்தலம் உள்ளது. நெல்லையில் இருந்தும் மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல முடியும். இந்த தோரணமலையின் உச்சியில் முருகன் குடி கொண்டிருக்கிறான்.

இந்த முருகப்பெருமானுக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா?

தமிழ் வாழ வழி வகுத்த குறுமுனியான அகத்தியர், மருத்துவ உலகமே வியந்து பார்க்கும் தேரையர் சித்தர் இருவரும் பல நூறு ஆண்டுகளாக வழிபட்ட பெருமை, மகிமையும் இந்த முருகப் பெருமானுக்கு உண்டு. தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான முருகத் தலங்களில் அறுபடை வீடுகள் உள்பட எந்த ஒரு தலத்துக்கும் இல்லாத மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாக இது கருதப்படுகிறது.

பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். நீங்கள் என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் சரி... தொழில் விருத்தி ஆகவேண்டுமா? குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளா? கடன் தொல்லையா? நல்ல வேலை வேண்டுமா? பதவி உயர்வு வேண்டுமா? திருமணம் நடக்க வேண்டுமா? புத்திரப் பாக்கியம் வேண்டுமா? இப்படி நீங்கள் என்ன கேட்டாலும் தோரண மலை முருகன் வாரி வழங்க தயங்குவதே இல்லை.

அகத்தியரின் மருத்துவ ஆய்வுக்கு வித்திடப்பட்ட இடம் இந்த தோரணமலை என்பது குறிப்பிடத்தக்கது. அகத்தியரின் சீடராக வந்து சேர்ந்த தேரையரும் மருத்துவத்தில் நிறைய புதுமைகளை செய்தார். அவர்கள் இருவராலும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோரணமலை மிகப்பெரும் மருத்துவ தொழிற்சாலை போல செயல்பட்டது.

அவர்கள் அந்த மலையில் இருந்த போது, தங்கள் இஷ்ட தெய்வமான இந்த முருகரை வழிபட்டனர். சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார். அவரது சீடர் தேரையரோ, அந்த தோரணமலையின் ஒரு பகுதியில் ஜீவசமாதி ஆகிப்போனார். மிகவும் சிறப்பாக வழிபடப்பட்ட முருகனும் கால ஓட்டத்தில் அருகில் உள்ள சுனைக்குள் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. தோரணமலை அருகில் உள்ள முத்துமாலைபுரம் என்ற ஊரை சேர்ந்த நா.பெருமாள் என்பவர் கனவில் ஒருநாள் முருகப்பெருமான் தோன்றினார்.

“நான் தோரணமலை உச்சியில் உள்ள சுனைக்குள் கிடக்கிறேன். என்னை வெளியில் எடுத்து வைத்து வணங்குங்கள்” என்றான். மறுநாள் விடிந்ததும் பெருமாள் ஆட்களை அழைத்து கொண்டு மலை உச்சிக்கு சென்றார். சுனையில் உள்ள தண்ணீரை இறைத்து வெளியேற்றினார்கள். சொன்னபடி தோரணமலைமுருகன் அங்கே இருந்தார்.

அந்த சிலையை எடுத்து மலை அடி வார குகையில் வைத்து வழிபட்டனர். இன்றும் அந்த சிலையே தோரணமலை சன்னிதானத்தில் மூலவராக உள்ளார். பெருமாளின் மகனும் ஆசிரியருமான ஆதிநாராயணன், தோரணமலை முருகன் பற்றிய சிறப்புகளை பரப்பச் செய்தார். தற்போது அவருக்கு 84 வயது ஆகிறது. 60 ஆண்டுகளாக தோரணமலை முருகனுக்கு சேவை செய்த சிறப்பு அவருக்கு உண்டு.

தற்போது அவரது குமாரர் செண்பகராமன், தோரணமலை முருகனின் சிறப்புகளை உலகம் முழுமைக்கும் பரவச்செய்யும் தன்னலமற்ற பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதனால் தோரணமலை முருகனை வழிபட வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது.

தோரணமலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 1 தமிழ்ப்புத்தாண்டு விழா மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தோரணமலை முருகன் பற்றிய கூடுதல் தகவல்களை செண்பகராமனிடம் 99657 62002 என்ற எண்ணில் பெறலாம்.

பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன. இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அரூப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிர்ப்பதை உணர முடியும்.

மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது. எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும்.

இத்தகைய சிறப்புடைய இந்த புண்ணியமலை உச்சியில் முக்கியமான வசதிகள் இல்லாதது மிகப்பெரும் மனக்குறைவாக உள்ளது. முருகப்பக்தர்கள் நினைத்தால் மூன்று மாதத்தில் அந்தத்திருப்பணிகளை செய்து முடித்து விடமுடியும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோரணமலையில் இந்தத்திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பமும் நிச்சயம் வாழையடி வாழையாக தழைக்கும்.
Tags:    

Similar News