ஆன்மிகம்

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் ஆலயங்கள்

Published On 2019-03-11 05:35 GMT   |   Update On 2019-03-11 05:35 GMT
சனி பகவான் வீற்றிருக்கும் ஒவ்வொரு ஆலயங்களும் சிறப்பு மிக்கவையாக இருக்கிறது. சனீஸ்வர பகவான் அருள்புரியும் சில தலங்களை இங்கே பார்க்கலாம்.
சனி பகவான் வீற்றிருக்கும் ஒவ்வொரு ஆலயங்களும் சிறப்பு மிக்கவையாக இருக்கிறது. சனி பகவான் இருக்கும் ஆலயங்களில் எல்லாம், பிரதான தெய்வங்களையும், சனீஸ்வரரையும் வழிபட்டால் தான் முழுமையான பலன்கள் கிடைக்கும். சனீஸ்வர பகவான் அருள்புரியும் சில தலங்களை இங்கே பார்க்கலாம்.

திருநள்ளாறு

காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு. நள மகா சக்கரவர்த்தியின் ஏழரை நாட்டு சனி விலகிய தலம் இது. இங்குள்ள நள தீர்த்தம் விசேஷம் மிக்கது. இந்த குளத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரையும், சனி பகவானையும் வழிபாடு செய்தால், சனி தோஷங்கள் விலகும். நன்மைகள் வந்து சேரும் என்பது ஐதீகம். தர்ப்பாரண்யேஸ்வரர் சன்னிதிக்கு செல்லும் வழியில், ஒரு சிறு மாடம் போன்ற அமைப்பில் சனி பகவான் அமர்ந்து அருளாட்சி செய்கிறார். சிறப்பு மிக்க நாட்களில், இத்தலத்தில் அருளும் சனி பகவான், தங்க காக வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு திருக்காட்சி தருகிறார்.

குச்சனூர்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ளது குச்சனூர். இங்கு சனி பகவான் சுயம்பு மூர்த்தியாய் அருள்கிறார். கல் தூணாக பூமியில் இருந்து தோன்றிய மூர்த்தம் இது. இந்த இறைவனுக்கு மஞ்சள் காப்பு சாத்துகிறார்கள். சூரியனின் மகன் என்பதால் நாமமும், ஈஸ்வர பட்டம் பெற்றிருப்பதால் விபூதியும் அணிவிக்கிறார்கள். நீதியை வழங்குபவராகவும், வயிற்று வலி நீக்குபவராகவும் இந்த குச்சனூர் சனீஸ்வரன் திகழ்கிறார். தேனியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது.

எட்டியத்தளி

புதுக்கோட்டை, அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டியத்தளி. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு, இந்த திருத்தலத்திற்கு வருகை தந்தார். அப்போது அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன், தன்னுடைய சனி தோஷம் நீங்குவதற்காக திருநள்ளாறு திருத்தலத்திற்கு இந்த வழியாகச் சென்றார். அந்த மன்னனை அகத்தியர் தடுத்து நிறுத்தி, அஷ்டம சனிக்கு பரிகாரமாக தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும், இங்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபடும்படி அறிவுறுத்தினார். மேலும் நவக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்யும்படியும், ஈசனின் ஈசான பார்வை சனி பகவானின் மீது படும்படியும் ஆலயத்தை அமைக்கக் கூறினார். அதன்படியே செய்த மன்னனின் சனி தோஷம் நீங்கியது. சிறந்த சனி தோஷ பரிகாரத் தலங்களில் எட்டியத்தளி ஆலயமும் ஒன்றாக விளங்குகிறது.

மங்கம்மாபேட்டை

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ளது மங்கம்மாபேட்டை. இங்குள்ள ஆலயத்தில் சனி பகவான், தன்னுடைய மனைவி நீலாதேவியை மடியில் அமர்த்தியபடி கல்யாண சனீஸ்வரராக காட்சியளிக்கிறார். எனவே இந்த ஆலயத்தில் இங்கே சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், பீமரதசாந்தி போன்ற சுப விசேஷங்களையும் செய்கிறார்கள். இவ்வாறு செய்வதால், ஆயுள் விருத்தியாகி, குடும்ப நலனும் மேம்படுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பிரமிடு போன்று அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் கருவறை விமானம் மிகவும் சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. தன் சகோதரன் எமதர்மனுக்கு உரித்தான தென்முகம் நோக்கி அருள்பாலிக்கிறார் சனி பகவான். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்குரிய சக்கரங்கள், சனி பகவானின் பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன. எனவே கிரக தோஷங்கள் போக்கும் தெய்வமாகவும் இத்தல சனி பகவான் திகழ்கிறார்.

திருவாதவூர்

இந்தத் திருத்தலத்தில் வேதபுரீஸ்வரரும், வேதநாயகி அம்மனும் அருள்பாலிக்கிறார்கள். இங்கு சனி பகவானுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் சனி பகவானுக்கு முடக்கு வாத நோய் ஏற்பட்டது. அந்த நோய் நீங்குவதற்காக, சனி பகவான் இத்தலத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டார். இதையடுத்து அவரது வாத நோய் நீங்கியது. இதனால் தான் இந்த திருத்தலத்திற்கு ‘திருவாதவூர்’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இத்தலத்து ஈசனையும், சனி பகவானையும் வழிபட்டால் சனி தோஷங்களில் இருந்து விடுபடலாம். மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ. தொலைவில் திருவாதவூர் உள்ளது.

பொழிச்சலூர்

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ளது பொழிச்சலூர் திருத்தலம். இங்கு பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சனி பகவானும் ஒரு வரப்பிரசாதியாக இருந்து அருள்பாலிக்கிறார். சனீஸ்வர பகவான் நேரடியாக இத்தல இறைவனை பூஜித்ததாகவும், இங்குள்ள நள்ளாறு தீர்த்தத்தில் நீராடி தன்னுடைய தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் தல வரலாறு சொல்கிறது. எனவே இத்தலம் வடதிருநள்ளாறு என அழைக்கப்படுகிறது. திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள், இத்தல இறைவனான அகஸ்தீஸ்வரருக்கும் சனீஸ்வரனுக்கும் அந்த பரிகாரங்களைச் செய்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.

சோழவந்தான்

சோழவந்தானில் இருந்து குருவித்துறைக்குப் போகும் பாதையில் சனி பகவான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைத்து வழிபட நினைத்தார்கள். அதற்காக சிலை வடிக்க ஏற்பாடு நடைபெற்றது. ஆலயம் கட்டி, கருவறையில் முருகனின் சிலையை அமைக்க அனைவரும் காத்திருந்தனர். அந்த நேரத்தில் காஞ்சி மகாமுனி, ‘இது சனி பகவான் சிலை. உங்கள் ஊரில் நிறுவி வழிபடுங்கள்’ என அடையாளம் காட்டி ஆசி அளித்தார். தனது மேல் கரங்களில் ஆயுதங்கள் தரித்து, கீழ் வலது கரம் அபய ஹஸ்தமாகவும், கீழ் இடது கரம் கதாயுதம் ஏந்தியும் சனி பகவான் காட்சி தருகிறார். அருகில் காக வாகனம் உள்ளது. இத்தலம் சனி தோஷம் நீக்குவதற்கும், விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார தலமாகவும் இருக்கிறது. மதுரையில் இருந்து 27 கி.மீ. தொலைவில் இருக்கிறது சோழவந்தான்.
Tags:    

Similar News