ஆன்மிகம்
பொன்முடி சூரிய நந்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பிகை

பூர்வ புண்ணிய பலனை கூட்டும் சூரிய நந்தீஸ்வர ஜோதிர்லிங்கம் கோவில்

Published On 2019-03-02 01:21 GMT   |   Update On 2019-03-02 01:21 GMT
பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் உள்ள சென்னப்பமலையில் நடந்த ஜோதிர்லிங்க உத்பவம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
மகா சிவராத்திரி என்பது ஆண்டுக்கு ஒருமுறை வரும் தெய்வீக நிகழ்வாகும். அன்று இறைவனே மனித உருவில் பூலோகம் வந்து, அனைத்து ஜீவராசிகளுக்கும் முக்தியை அளிக்கிறார். அதனால், சகல தோஷ நிவர்த்தியும், ஜென்ம சாபல்யமும் அன்றைய தினம் அனைவரும் பெறலாம் என்பது நம்பிக்கை. மகா சிவராத்திரிக்கு மெருகூட்டும் வகையில் பூமியைப் பிளந்துகொண்டு உருவானவை ஜோதிர்லிங்கங்கள் ஆகும். இந்த நாளில்தான் உலகில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களும் உத்பவம் ஆகி உள்ளன. அதாவது, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது வெளிவந்த அமிர்தத்தை அசுரர்கள் பறித்து செல்லும்போது பூமியில் சிதறிய அமிர்த துளிகளே ஜோதிர்லிங்கங்களாக வெவ்வேறு இடங்களில் உத்பவம் ஆயின என்று புராணங்கள் கூறுகின்றன. மகா சிவராத்திரி நாளில் ஞான மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு தக்க விடை கிடைத்து, ஆன்மிக உயர்வு பெறுகிறார்கள் என்பது சான்றோர்களின் கருத்தாகும்.

ஜோதிர்லிங்கங்கள் இயற்கையாக மகாசிவராத்திரி அன்று மட்டுமே தோன்றுகின்றன. இப்படித் தானாக உதயம் ஆவது ‘உத்பவம்’ எனப்படும். உத்பவம் என்பதும், சுயம்பு என்பதும் வெவ்வேறானவை ஆகும். அந்த வகையில் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் உள்ள சென்னப்பமலையில் நடந்த ஜோதிர்லிங்க உத்பவம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

இந்த தலம் ஜோதிர்லிங்கங்களின் வரிசையில் பதின்மூன்றாவதாக குறிப்பிடப்படுகிறது. பல புராண, சரித்திர நிகழ்ச்சிகளுடன் தொடர்பு பெற்ற தலமாகவும் உள்ளது. இந்த இடம் கடம்பூர் மலைக்கு அருகில் பாட்டூர் என்ற பெயரில் ஒரு காலத்தில் பனங்காடாக இருந்துள்ளது. கடம்பூர் (தற்போது கடாம்பூர்) மலையும் இந்த இடத்துக்கு மிக அருகாமையில் உள்ளது. இந்த தலத்தில் சித்தர் கோடித்தாத்தா பிரம்ம குருவாக முன்னின்று உத்பவ நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.

ஸ்தல புராணங்கள் படி, முன்னொரு காலத்தில் பரமேஸ்வரனின் உடலில் அங்கம் வகிக்கும் அகிலாண்டேஸ்வரி தென் கயிலாயம் என்று போற்றப்படும் பனங்காட்டுப் பிரதேசமாக உள்ள சென்னப்பமலைத் தலத்தில் கடும் தவமிருந்தாள். பூவுலகில் உள்ள 84 லட்சம் ஜீவராசிகளுக்கு மட்டுமல்லாமல், சூரியன், சந்திரன், தேவேந்திரன், குபேரன் ஆகிய தேவர் களுக்கும் சாப விமோசனம் அளிக்கும் வகையில் சென்னப்பமலைத் திருத்தலத்தில் அருள் பாலிக்க பரமேஸ்வரனிடம் வேண்டினாள். தவத்தை மெச்சிய பரமேஸ்வரன், இதே தலத்தில் பின்னொரு காலத்தில் பிரம்ம குரு ஒருவரால் மகாசிவராத்திரி அன்று ‘தானே ஜோதிர்லிங்கமாக இங்கே உத்பவமாகி, வழிபடும் அனைத்து ஜீவராசிகளும் ஜென்ம சாப விமோசனம் பெறலாம்’ என்று வரம் அருளினார்.

அந்த அதிசய நிகழ்வை நடத்திக்காட்ட தெய்வ அம்சங்கள் பொருந்தியவர் தேவை என்று எண்ணிய அம்பிகை, இதே பனங்காடு பிரதேசமான, தற்போது வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாட்டூர் கிராமத்தில் வசித்து வந்த ராமநாதன் என்ற சாதாரணமான ஆனால் தெய்வ அம்சங்கள் பொருந்திய இளைஞரை தேர்வு செய்தாள். அவருக்கு குருவாக இருந்து தீட்சை அளிக்க கோடித்தாத்தாவை அனுப்பி வைத்தாள். அவர் 1994 வரை கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே புரவிப்பாளையம் ஜமீன் அரண்மனையில் ஜீவ உடலுடன் வாழ்ந்து வந்தவர் ஆவார்.

முக்காலமும் உணர்ந்த, கோடிதாத்தா (கோடிசாமி) என்ற ஞான குரு மூலம் தான் தேர்வு செய்த சீடருக்கு தீட்சை அளிக்க அம்பிகை அவரிடம் முன்மொழிந்தாள். கூடுவிட்டு கூடு பாயும் சித்த வித்தையான பரகாய பிரவேசம் என்ற முறையில் சீடர் உடலுக்குள் ஐக்கியம் ஆகி, குருவே சீடனாகி, கோடி சாமியாக முன்னின்று சென்னப்பமலைத் திருத்தல ஜோதிர்லிங்க உத்பவ நிகழ்வை நடத்தினார். அதை ஆயிரக் கணக்கான பக்தர்களும், மாவட்ட உயர் அதிகாரிகளும் நேரில் கண்டு பரவசம் கொண்டனர்.

இந்த தல இறைவனை பல சித்தர்களும், ஞானிகளும் வழிபட்டுள்ளனர். ரோம ரிஷி குதம்பை சித்தராக இங்கே பசுக்களை மேய்த்து வந்ததாகவும், பின்னர் அவரே பாம்பாட்டி சித்தராகவும், கோடித்தாத்தா என்ற சமீப கால சித்தராகவும் இருந்து ஜோதிர்லிங்க உத்பவம் ஆக வழி காட்டினார் என்பது ஸ்தல வரலாறு. சுமார் 1600 வருடங்களுக்கு முன்னர் ஆதிசங்கரர் கயிலாயம் செல்லும் வழியில், இந்த சென்னப்பமலை தலத்தில் ஏழு நாட்கள் தங்கி, மலையின்மேல் உள்ள பன்னீர் குளத்திலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து வழிபட்டதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. 800 வருடங்களுக்கு முன் வாழ்ந்த சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர் இந்த தலத்தை பற்றி பல பாடல்களில் விவரித்து உள்ளனர். இந்தத் திருத்தலம் தென் கயிலாயமாக போற்றப்பட்டு வந்துள்ளது. உலகத்துக்கு ஒளி தரும் சூரியன் தன் சாபம் நீங்க, நந்தி வடிவில் ஒவ்வொரு நாளும் இங்கே வழிபட்டு செல்வதாகவும் ஐதீகம்.

இந்த தலத்தில் உருவான லிங்கத்துக்கு புராண ரீதியாக ‘பொன்முடி சூரிய நந்தீஸ்வரர்’ என்பது பெயர். பொன்முடி தரித்த ஈஸ்வரன், சூரியன் மற்றும் நந்தி ஆகியோர் இணைந்த பெயருக்கு ஒரு காரணம் உண்டு. ஒரு காலத்தில் சிலத முனி என்பவர் புத்திர வரம் வேண்டி பரமேஸ்வரனை நோக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் புரிந்து, கிடைத்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் சூட்டி, ஞானத்தை போதித்து வந்தார். அந்த நிலையில் அவர்கள் குடிலுக்கு வந்த இரு முனிவர்கள், நந்திக்கு ஆயுள் பலம் குறைவாக இருப்பதாக கணித்தனர்.

அதனால், கவலையுற்ற தந்தைக்கு தைரியம் தந்து, நம்பிக்கையூட்டி பரமேஸ்வரனை நோக்கி கடும் தவம் புரிந்தான் சிறுவன் நந்தி. அப்போது தன் முன்னே தோன்றிய இறைவனிடன் எப்போதும் அவருடன் இருக்கும் பாக்கியம் தர வேண்டினான். அதன்படியே வரம் தந்த இறைவன் நந்தியை தன் குடும்பத்தில் ஒருவனாக, காளை மாடு வடிவமாக்கி தன் வாகனமாக வைத்துக்கொண்டார். ஆலயங்களில் கருவறையில் உள்ள லிங்கத்துக்கு எதிரில் நந்தி பணிவுடன் அமர்ந்து மோன தவத்தில், விழிப்பு, பணிவு, பொறுமை, பக்தி, அமைதி, சாந்தம், எதையும் எதிர்பார்க்காமல் தன் ஐயன் கட்டளைக்காகக் காத்திருப்பது போன்ற அரிய குணங்களை வெளிப்படுத்துகிறார். வழிபாட்டு முறைகளை நந்தியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே அதன் தத்துவம்.

அன்றாடம் ஆதவனை தொழுதால் ஆயுள் பலம் பெருகும் என்பது சாஸ்திரம். உயிரினங்களுக்கு சக்தி தரும் சூரியன், இத்தலத்து இறைவனை அன்றாடம் வணங்கி சாப விமோசனம் பெற்று, தனது சக்தியை மீண்டும் பெறுவதாக தல புராணம் சொல்கிறது. இங்கு ஐக்கியம் கொண்டுள்ள ஜகத்குரு கோடிதாத்தா சாமியும், அவரது சீடர் ராமநாத சாமியும், அருவமும் உருவமும் கலந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஜோதிர்லிங்க தலமும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஏற்ற வகையில் சிறப்பு வழிபாட்டு முறை களையும், நியதிகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில் சென்னப்பமலை ஜோதிர்லிங்க வழிபாட்டு வழிமுறைகள் எங்கும் இல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவை. உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரன், கற்றவன், கல்லாதவன், ஆண், பெண், குழந்தைகள், வயோதிகர்கள், ஜாதி, மதம் போன்ற எந்த பேதமும் இல்லாமல், அனைவரும் வணங்கி வளம் பெற இறைவனே அமைத்துக் கொடுத்துள்ள தலம் இதுவாகும்.

எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக சென்னப்பமலையில் பக்தர்கள் தாங்களே கருவறைக்குள் சென்று ஜோதிர்லிங்கத்தைத் தொட்டு வணங்கலாம். ஏழு முறை தொட்டு வழிபடுவோருக்கு ஜென்ம சாப விமோசனம் அப்போதே கிடைத்து, சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். அங்கு உள்ள பொன்முடி சூரிய நந்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி அம்பிகையை தொழுபவர்களுக்கு, சந்தான பாக்கியம், சரஸ்வதி பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் பத்மா சனத்தில் அமர்ந்து, ஜோதிர்லிங்கத் திருக்கோவில் வளாகத்தில் தியானம் செய்தால் இறைவன் ஜென்ம சாப விமோசனம் தருவான் என்பது நம்பிக்கை. மேலும், மகா சிவராத்திரி அன்று மட்டும் ஜோதிர்லிங்கத்துக்கு பக்தர்கள் தாங்களே பசும்பால் மற்றும் வில்வ இலை கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம் என்பது முக்கியமான விஷயமாகும்.

நந்தி குறிப்பிடும் அமைதி தத்துவம் :

நந்தி என்ற காளை மாடு பலம், ஆக்ரோஷம், வேகம், திறமை போன்றவை கொண்ட உருவமாக தோன்றினாலும், அமைதியோடும், பொறுமையோடும் எப்படிக் காத்திருப்பது என்ற குணத்தை நந்தியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் ஆலயங்களில் நந்தி அருகில் அமர்ந்து, தியான நிலையில் பரமனின் பதிலுக்காக பொறுமையுடன் காத்திருக்க பழகிக்கொள்ளும் நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். பிரார்த்தனைக்கும், தியானத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றி தெரிந்து கொள்ள நந்தியை கவனிக்க வேண்டும். அதாவது, பிரார்த்தனை வழியாக கோரிக்கைகளுடன் பரம்பொருளுடன் அனைவரும் மனதால் பேசுகிறோம். ஆனால், தியான நிலையில் பரம்பொருளின் பதிலை பெற அமைதியுடனும், பொறுமையுடனும் காத்திருக்கவேண்டும் என்பது அதன் உட்பொருளாகும்.

கோவில் அமைவிடம் :

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகாவில் உள்ள வெங்கடசமுத்திரம் மற்றும் மிட்டாளம் ஊராட்சிகளுக்கு இடையே வனப்பகுதியில் உள்ள சென்னப்ப மலை அடிவாரத்தில் கோவில் அமைந்துள்ளது. 
Tags:    

Similar News