ஆன்மிகம்

முன்னோர்களுக்கு அருள் செய்யும் திருநாவாய் முகுந்தன் கோவில்

Published On 2018-02-09 03:50 GMT   |   Update On 2018-02-09 03:50 GMT
முன்னோர்களுக்கான சிறப்புப் பூஜை செய்யக்கூடிய தலமாக கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டத்திலிருக்கும் திருநாவாய் முகுந்தன் கோவில் அமைந்திருக்கிறது.
திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் பாசுரங்களில் பாடல் பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், முன்னோர்களுக்கான சிறப்புப் பூஜை செய்யக்கூடிய தலமாகவும் கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டத்திலிருக்கும் திருநாவாய் முகுந்தன் கோவில் அமைந்திருக்கிறது.

தல வரலாறு :

காடுகளின் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த ஒன்பது முனிவர்களுக்கு, அவர்கள் சென்ற வழியில் இருந்த ஒரு இடம் பிடித்துப் போனது. அந்த இடத்தில் அவர்கள் இறைவன் விஷ்ணுவை வேண்டித் தவம் செய்யத் தொடங்கினர். அவர்களில் எட்டு முனிவர்கள் ஒருவர் பின் ஒருவராக முக்தியடைந்தனர். இந்த நிலையில் ஒன்பதாவதாக இருந்த முனிவர் வருத்தமடைந்தார்.

அவர் முன்பாகத் தோன்றிய விஷ்ணு அவரது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். அம்முனிவர், “இறைவனே, இங்கு என்னுடன் தவமிருந்த எட்டு முனிவர்களும் முக்தி பெற்று விட்டனர். அவர்களுடன் அவர்கள் வழிபட்டு வந்த தங்களுருவச் சிலைகளும் மறைந்து போய்விட்டன. அவர் களைப் பிரிந்து நான் மட்டும் தனிமையில் இருப்பதால் வருத்தம் தோன்றுகிறது” என்றார்.

இறைவன் அவருடைய வருத்தத்தைப் போக்க, அவருக்கு எட்டு முனிவர்களையும் காட்டியருளினார். முனிவர் மகிழ்ச்சியோடு அவர்களனைவரையும் தன்னுடன் இருக்கும்படி வேண்டினார். அதற்கு அவர்கள், இறைவன் அருளால் நாங்கள் முக்தி பெற்று விட்டாலும், பிறர் கண்களுக்குத் தெரியாமல் இங்கு உங்களோடுதான் இருந்து கொண்டு இருக்கிறோம் என்றனர்.

அதைக்கேட்ட ஒன்பதாவது முனிவர் இறைவனிடம், தானும் பிறர் கண்களுக்குத் தெரியாமலிருக்க அருளும்படி வேண்டினார். இறைவனும் அவர் வேண்டியதை வழங்கினார். அவர் வழிபட்டு வந்த இறைவனின் திருவுருவச் சிலையையும் தன்னுடன் மறைந்து வந்தடையச் செய்யும்படி இறைவனிடம் வேண்டினார்.

இறைவன் ஒன்பதாவது முனிவரிடம், “முனிவரே, நானும் இங்கிருந்து தங்களுடன் மறைவாக வந்துவிட்டால், இந்த இடம் ஒன்பது முனிவர்கள் வழிபட்டு முக்தியடைந்த இடம் என்பது மற்றவர்களுக்குத் தெரியாமலே போய்விடும். பிறர் கண்களுக்குத் தெரியாத நீங்கள் இங்கிருக்கும் நதியில் நீராடி, இங்குள்ள மலர்களைப் பறித்து இந்தத் திருவுருவச் சிலையினை அலங்கரித்து எப்போதும் போல் வழிபட்டு வாருங்கள். பிற்காலத்தில் இந்த இடம் அனைவரும் வழிபடும் சிறப்பு மிகுந்த இடமாகி விடும்” என்றார்.

அதைக் கேட்டு மகிழ்ந்த அம்முனிவர் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இறைவன் சொல்லியபடி பிறர் கண்ணுக்குத் தெரியாமல் தொடர்ந்து வழிபாடு செய்து வரச் சம்மதித்தார். இறைவனும் ஒன்பதாவது முனிவர் வழிபட்ட திருவுருவச்சிலையின் வடிவிலேயே அங்கு கோவில் கொண்டார் என்று இத்தலம் அமைந்த வரலாறு சொல்லப்படுகிறது.

கஜேந்திரன் வழிபாடு :

பிற்காலத்தில் இங்குள்ள இறைவனுக்கு மகாலட்சுமியும், கஜேந்திரனும் இங்கிருக்கும் நதியின் ஓடையில் இருந்த தாமரை மலர்களைப் பறித்துப் படைத்து வழிபட்டு வந்தனர். ஓடையில் இருந்த மலர்களை இறைவியான மகாலட்சுமி முன்பே பறித்துச் சென்றதால், கஜேந்திரனின் வழிபாட்டுக்குத் தேவையான மலர்கள் கிடைக்காமல் போனது. தனக்கு முன்பாக அங்கிருக்கும் மலர்களை யார் பறித்துச் செல்கின்றனர் என்பதை அவனால் கண்டறியவும் முடியவில்லை.

இந்நிலையில் ஒருநாள் கஜேந்திரனுக்கு ஒரு மலர் கூட கிடைக்கவில்லை. அதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் இறைவனிடம் தனக்கு முன்பாக இங்கிருக்கும் மலர்களை யாரோ பறித்துச் சென்று விடுகின்றனர் என்று சொல்லி வருத்தப்பட்டான்.

அவன் வருத்தத்தைக் கண்ட இறைவன், அவனிடம் இனி அந்த இடத்தில் யாரும் மலர்களைப் பறிக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லக் கஜேந்திரனும் மகிழ்ச்சியடைந்தான். இறைவனின் பக்தனுக்காக மகாலட்சுமியும் அங்கு மலர் பறிப்பதை விட்டுக் கொடுக்க வேண்டியதாகி விட்டது.

அதன் பிறகு, கஜேந்திரன் அதிகமான மலர்களைப் பறித்து இறைவனுக்குச் சமர்ப்பித்து மகிழ்ச்சியாக வழிபட்டு வந்தான். தன்னால் அங்கிருக்கும் மலர்களைப் பறித்து இறைவனை வழிபட முடியவில்லையே என வருத்தமடைந்த மகாலட்சுமி, அருகில் ஒரு இடத்தில் சென்று அமர்ந்து தவமியற்றத் தொடங்கினாள்.

அவளது வருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன், மகாலட்சுமியை அழைத்து என் பக்தன் எனக்குச் சமர்ப்பிக்கும் மலர்களை நீயும் என்னுடனிருந்து ஏற்றுக் கொள் என்று சொல்லித் தன்னருகில் அமர்த்திக் கொண்டார். கஜேந்திரன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் பின்னர் அவனுக்கு உயர்நிலையைத் தந்தார்.


நாவாய் முகுந்தன்

ஆலய அமைப்பு :

இக்கோவிலில் இருக்கும் இறைவன் நவ முகுந்தன் எனும் பெயரில் கிழக்கு திசை நோக்கியபடி காட்சியளிக்கிறார். இங்குள்ள இறைவி மலர்மங்கை நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். கேரளாவில் மகாலட்சுமிக்கு இக்கோவிலில் மட்டுமே தனிச்சன்னிதி இருக்கிறது என்கின்றனர்.

பாரதப்புழை எனும் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இக்கோவில் வளாகத்தில் கணபதி, ஐயப்பன் ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. ஆற்றின் மறு கரையில் சிவன், பிரம்மா ஆகியோருக்கும் கோவில்கள் இருக்கின்றன என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

இக்கோவிலில் தினசரி காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அனைத்து ஏகாதசி நாட்களிலும் இங்குள்ள இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதத்தில் வரும் ஏகாதசி நாளை நவமுகுந்த ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

இங்கு கிருஷ்ணர் பிறந்ததாகக் கருதப்படும் அஷ்டமி ரோகிணி நாளிலும், நவராத்திரித் திருவிழாக் காலங்களிலும், விஷ்ணுவுக்குரியதாகக் கருதப்படும் அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி மேஷம் (சித்திரை) மாதம் தொடக்கத்திலிருந்து பத்து நாட்கள் நடைபெறும் சிறப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா நாட்களில் கேரள மரபு வழியிலான நடனங்கள், சொற்பொழிவுகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பெறுகின்றன.

பெயர்க்காரணம் :

விஷ்ணுவை வேண்டி ஒன்பது முனிவர்கள் வழிபட்ட இடம் என்பதால், ‘நவயோகி’ என்றும், பின்னர் திருநவயோகி என்றும் அழைக்கப்பட்டுப் பின்னர் பேச்சு வழக்கில் திருநாவாய் என்று மாறியிருக்கிறது என்று இந்த ஊருக்கான பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது.

ஆலயச் சிறப்புகள் :

* இத்தலம் மகாலட்சுமியும், கஜேந்திரனும் வழிபட்ட சிறப்புத் தலமாகும்.

* இக்கோவில் திருமங்கையாழ்வாரால் 2 பாசுரங்களாலும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களாலும் பாடல் பெற்ற 108 வைணவத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது.

* இந்த ஆலயமானது, பித்ரு பூஜை செய்வதற்கான சிறப்புமிக்க தலமாகும்.

முன்னோர் பூஜைக்கான தலம் :

துவாரபரயுகத்தில் கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து திருநவயோகி தலத்திற்கு வந்து, தம் முன்னோருக்குப் (பித்ரு) பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் முன்னோர் களுக்கான பூஜை செய்தால் அளவிட முடியாத நற்பலன்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அமாவாசை நாட்களில் இக்கோவிலின் தலவிருட்சம் அடியில் முன்னோர்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். கோவிலருகில் முன்னோர் பூஜை செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அமைவிடம் :

கேரளா மாநிலம், மலப்புறம் மாவட்டத்திலிருக்கும் திரூர் நகரில் இருந்து தெற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குத் திரூர் நகரிலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பாலக்காடு, குருவாயூர், திருச்சூர், எர்ணாகுளம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து திரூர் செல்வதற்கான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
Tags:    

Similar News