ஆன்மிகம்

ஏழு குருபகவான்கள் வீற்றிருக்கும் உத்தமர் திருக்கோவில்

Published On 2018-02-08 03:47 GMT   |   Update On 2018-02-08 03:47 GMT
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உத்தமர் திருக்கோவில். ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் இதுவாகும்.
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உத்தமர் திருக்கோவில். ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் இதுவாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசமாகும்.

தல வரலாறு:

சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதி தேவி, அவரை தனது கணவர் என நினைத்து பணிவிடை செய்தார். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார்.

இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை.

அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார்.

அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசியை நீக்கியது. இதனால் தாயார் ‘பூரணவல்லி’ என்ற பெயரும் பெற்றாள். பெருமாளும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.

தல பெருமை :

புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமாதலால், உத்தமர் கோவில் எனப் புகழ் பெற்றது. பெருமாள் கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

ஏழு குருபகவான்

1. பிரம்மகுரு

2. விஷ்ணுகுரு

3. சிவகுரு

4. சக்திகுரு

5. சுப்ரமணியகுரு

6. தேவகுரு பிரஹஸ்பதி

7. அசுரகுரு சுக்ராச்சார்யார்

ஆகிய ஏழு குருபகவான்கள் இத்தலத்தில் வீற்றிருக்கின்றனர். தென்முகமாக குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னிதியில் பிரம்மா அருளும் தலமாகவும் விளங்குகிறது. மேலும் பிரம்மாவின் இடதுபுறம் தனி சன்னிதியில் ஞான சரஸ்வதி அருள்பாலிக்கும் தலமாகவும் அமைந்திருக்கிறது.

தல சிறப்பு :

மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியருடன், அருகருகே தனித்தனி சன்னிதிகளில் அமைந்து அருளும் திருத்தலம் இந்தியாவில் இது ஒன்றே.
Tags:    

Similar News