ஆன்மிகம்

பெருமை மிகுந்த பெருவுடையார் கோவில்

Published On 2017-01-27 06:11 GMT   |   Update On 2017-01-27 06:11 GMT
கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையார் ஆலயத்தை ராஜேந்திர சோழன், தனது தந்தை ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியக் கோவிலைப் போன்றே வடிவமைத்தான்.
தஞ்சைக்கு அடுத்ததாக பிற்கால சோழர்களின் தலைநகராக இருந்த பெருமைக்குரிய ஊர் கங்கைகொண்டசோழபுரம். ராஜராஜசோழனின் மகனும் கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவனுமான ராஜேந்திர சோழனால், தனது கங்கை படையெடுப்பின் வெற்றிச் சின்னமான நிர்மாணிக்கப்பட்ட ஊர், கங்கைகொண்ட சோழபுரம்.

தனது தந்தை ராஜராஜசோழன் தென்திசையிலுள்ள நாடுகளை வெற்றிக்கொண்டு, அந்த நினைவை போற்றும் விதமாக தஞ்சையில் மிகப்பெரிய கற்றளியை கட்டியதுபோல, தானும் பல வெற்றிகளைப் பெற்று அதன் நினைவாக ஒரு கற்றளியை எழுப்ப வேண்டும் என்பது ராஜேந்திர சோழனின் ஆசை. அதன்படி கட்டப்பட்டதுதான் கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பெருவுடையார் கோவில். இந்த ஆலயம் மாடக்கோவில் என்று அழைக்கப்படும் விமானங்களைக் கொண்டவை.

ஆலய அமைப்பு :

இந்த ஆலயத்தை ராஜேந்திர சோழன், தனது தந்தை ராஜராஜ சோழன் கட்டி தஞ்சை பெரியக் கோவிலைப் போன்றே வடிவமைத்தான். தஞ்சைகோவில் 216 அடி உயரமும் நான்கு பட்டை வடிவிலான விமானத்துடன் 9 தளங்களைக் கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் கோவில் 180 அடி உயரமும் எட்டு பட்டை வடிவிலான விமானத்துடன் 7 தளங்களைக் கொண்டது.

கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில், அனைவரையும் கவரும் அமைப்பாக ஆலய விமானத்தைக் குறிப்பிடலாம். தஞ்சை கோவிலுக்கு அடுத்து கங்கைகொண்டசோழபுரம் விமானமே தமிழ்நாட்டில் உள்ள விமானங்களில் உயர்ந்தது. உள்ளே இருக்கின்ற லிங்கத்தின் பரிமாணத்திற்கேற்ப விமானம் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் வடக்கு என இரு வாசல்கள் உள்ளன. கோவிலுக்கு முன்னாள் திருக்குளம் அமைந்துள்ளது.

கோவில் அமைப்பில் கருவறை, அர்த்தமண்டபம், இடைநாழி, மணிமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், நந்திமேடை ஆகியவை இடம்பெற்றுள்ளன. பிரகாரமானது தென் கயிலாயம், விநாயகர் சன்னிதி, வடகயிலாயம் (அம்மன் சன்னிதி), சண்டிகேஸ்வரர் சன்னிதி, வடவாசல் மண்டபம், கொற்றவை சன்னிதி, சிங்கமுகக்கிணறு, திருச்சுற்று மதில் ஆகியவற்றுடனும் விளங்குகிறது. கோவிலின் கிழக்கு வாசலிலும், கர்ப்ப கிரகத்தின் முன்னேயும், தெற்கு வாசலிலும் 10 அடி உயரத்தில் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர்.

மகாமண்டபம், இடைநாழி மற்றும் கருவறை புறச்சுற்றுகளிலும், விமானத்தின் மாடங்களிலும் மகாலட்சுமி, கங்காளமூர்த்தி, நர்த்தன விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், ஆலமர்செல்வன், அரிகரன், ஆடவல்லான், கவுரிபிரசாதமூர்த்தி, லிங்கோத்பவர், திருமால், முருகப்பெருமான், சிவன்-பார்வதி, காலசம்ஹாரமூர்த்தி, எண்தோள் காளி, பிரம்மா, சரஸ்வதி, பைரவமூர்த்தி, சண்டேசர், ஞானசரஸ்வதி ஆகிய சிற்பங்கள் உள்ளன.

13 அடி உயரமும் 20 அடி சுற்றளவும் கொண்ட லிங்கம், 45 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார் மேல் பொருத்தப்பட்டுள்ளது. பழமைவாய்ந்த லிங்கங்களில் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் இதுவேயாகும். மகாமண்டபத்துக்குள் பல அரிய சிற்பங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கது சூரியபீடமாகும். (சூரியனின் தேர்போன்ற ஒரேகல்லில் வடிக்கப்பட்ட நவக்கிரகங்கள்). இதையொட்டி பைரவர் சூரியன் மற்றும் சிம்மதுர்கை இடம்பெற்றுள்ளனர். மகாமண்டபத்தின் வடதிசையில் நடராஜர், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், தென்திசையில் உற்சவத் திருமேனிகள் இடம்பெற்றுள்ளன. தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார்.

கும்பாபிஷேகம் :

வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழா 84 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, மாநில அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆகியவை எடுத்துள்ளன. சுமார் 2 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற 2-2-2017 அன்று (வியாழக்கிழமை) இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடத்தப்படும்.

இந்த விழாவிற்காக 17 வேதிகைகள், 51 ஹோமகுண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் முன்னதாக யாகசாலை பூஜைகள் தொடங்கப்படவுள்ளது. கும்பாபிஷேக விழாவில் புதிய கொடிமரம் நிலைநாட்டுதல் மற்றும் 9 அடி உயரத்திற்கு புதிய கலசம் வைத்து அதற்கு கங்கைநீரைக் கொண்டு கும்பாபிஷேகம் செய்தல் என்ற இரண்டு சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளன. இதற்காக 35 லட்ச ரூபாய் மதிப்பில், 48 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் தயாரிக்கப்பட்டு தங்க கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

பகீரதன் விண்ணுலகில் இருந்து கங்கையை மண்ணுலகிற்கு கொண்டு வந்தான். அதே போல வடஇந்தியாவில் இருந்து கங்கை நீரை தென்னிந்தியாவிற்கு கொண்டு வந்து பெருவுடையார் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்தான் ராஜேந்திர சோழன். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற உள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிலும் கங்கை நீரே பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக உத்திரகாண்ட் மாநிலம் பிரயாகையில் இருந்து 108 கேன்களில் கங்கைநீர் எடுத்துவரப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் திருலோக்கி உமாமகேஸ்வரர் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. விழா நேரத்தில் மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க கங்கை நீர், பெருவுடையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.

அமைவிடம் :

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் திருச்சி-சிதம்பரம் தேசியநெடுஞ்சாலையில் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் கிழக்காகவும், விக்கிரவாண்டி- தஞ்சை தேசியநெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் மேற்காகவும் அமைந்துள்ளது கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையார் கோவில்.

வரலாற்றை மீள்உருவாக்கம் செய்யும் விதமாக 84 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு பெருவுடையார் அருளையும் பெறுவோம்.

Similar News