ஆன்மிகம்

சிறுவனின் ஊனம் நீக்கிய அங்குரேஸ்வரர் திருக்கோவில்

Published On 2016-11-11 08:53 IST   |   Update On 2016-11-11 08:53:00 IST
திருச்சி மாவட்டம் லால்குடி - அன்பில் பேருந்து சாலையில், லால்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆதிகுடி என்ற திருத்தலம்.
திருச்சி மாவட்டம் லால்குடி - அன்பில் பேருந்து சாலையில், லால்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆதிகுடி என்ற திருத்தலம். இங்கு அங்குரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

நம் நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், பக்கவாதம் போல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த ஆலயத்தில் இருக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறம் நன்றாக திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறம் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்தும் வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்த விமல லிங்கம் அருள்பாலிக்கும் அங்குரேஸ்வரர் ஆலயம் ஆதிகுடியில் உள்ளது.

ஆலய அமைப்பு :

ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் அங்குரேஸ்வரர். இறைவியின் பெயர் பிரேமாம்பிகை. ஆலய முகப்பை தாண்டியதும் பிரகாரமும், நடுவே நந்தியப் பெருமானின் திருமேனியும் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் நுழைந்தால் எதிரே அன்னையின் சன்னிதியும், இடது புறம் இறைவனின் சன்னிதியும் உள்ளன. இறைவனின் அர்த்த மண்டப நுழைவாசலில் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகப்பெருமானும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

கருவறையில் இறைவன் சுயம்பு மூர்த்தியாய் லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னை பிரேமாம்பிகை தென் திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இறைவனின் தேவகோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் மகா விஷ்ணுவும், வடக்கில் துர்க்கையும் வீற்றிருக்கின்றனர்.

பிரகாரத்தில் தெற்கில் விமல லிங்கம் உள்ளது. இந்த விமல லிங்கம், மிகப் பெரிய அளவில் இருப்பதுடன் ஆலயத்தில் நுழைந்தவுடன் கண்களைக் கவரும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு திருச்சுற்றில் மகா கணபதி, சண்முக நாதர், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி ஆகியோரும், வடக்கில் சண்டிகேசுவரரின் சன்னிதியும் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் இருந்து அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தலமரமாக வன்னி மரம் உள்ளது.

தென் திசை நோக்கி அமர்ந்திருக்கும் இந்த ஆலயத்தின் எதிர் திசையில் மயானம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வாஞ்சியம் மற்றும் ஆதி குடியான இத்தலம் என இரண்டு ஆலயங்களுக்கு எதிரே மட்டும்தான், மயானம் அமைந்துள்ளதாக இந்தப் பகுதி பக்தர்கள் கூறுகின்றனர்.

தல வரலாறு :

முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஆலயம், பல நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்திற்கு ஒரு தல வரலாறும் உண்டு.

பழங்காலத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ள இடம் அடர்ந்த புதர்களும் புல் வெளிகளும் நிறைந்து காணப்பட்டது. ஆதிகுடி என்ற இந்த ஊரில் விமலன் என்ற பெயருடைய மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வசித்து வந்தான். அவன் பிறவியிலேயே ஒரு கை, கால் ஊனம் உள்ளவனாய் இருந்தான். அவன் தினசரி மாடுகளை புல் வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு, மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

ஒருநாள் அவன் ஓட்டிச் சென்ற மாடுகளின் கூட்டத்திலிருந்து பசு ஒன்று தனியாக பிரிந்து ஓரிடத்தில் நின்று தானாக பாலைச் சொரிந்தது. இதைக் கண்ட விமலன், தன் கையில் இருந்த அங்குரத்தால் (மண்வெட்டியால்) அந்த இடத்தை செதுக்கினான். அப்போது அவன் செதுக்கிய இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியானது. ரத்தத்தைக் கண்டதும், விமலன் அச்சமடைந்தான். செய்வது அறியாது திகைத்து நின்றான். பின் பதற்றத்துடன் ஊருக்குள் ஓடி, ஊர் மக்களிடம் தான் கண்ட காட்சியைக் கூறினான்.

ஊர் மக்கள் அவனை வியப்புடன் பார்த்தனர். பிறவி ஊனம் உள்ளவனாக இருந்த அவன், ஊனம் நீங்கி முழு நலத்துடன் தங்கள் முன் அவன் நிற்பதைக் கண்டு வியப்பின் எல்லைக்கேச் சென்றுவிட்டனர். ஆம்! விமலனின் உடல் குறைபாடு முழுமையாக நீங்கியிருந்தது. இதையடுத்து அவன் கூறிய இடத்திற்கு ஊர் மக்கள் அனைவரும் சென்றனர். அவன் சொன்ன இடத்தில் தோண்டிப் பார்த்தபோது, அங்கு ஒரு அழகிய சிவலிங்கம் தென்பட்டது.

அதை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் சோழ மன்னனால் அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அங்குரம் எனச் சொல்லப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால், இறைவனுக்கு அங்குரேஸ்வரர் என்ற பெயரே நிலைபெற்றுவிட்டது.

இங்குள்ள வாய்க்காலுக்கு கமல காசி தீர்த்தம் என்று பெயர். காசிக்கு இணையான தலம் இது. நீத்தார் கடன் செய்ய உகந்த இடம் என்றும் கூறப்படுகிறது.

திருவிழாக்கள் :

தினசரி இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி வெள்ளியில் சுமார் 200 பெண்கள் பங்கு பெறும் விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடத்தப்படும். மாதப் பிரதோஷ நாட்கள், மாத சிவராத்திரிகள், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை சோம வாரங்கள், மார்கழி தனுர் மாத பூஜை, தை பொங்கல், சித்திரை மாதப் பிறப்பு போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

மாடு மேய்க்கும் சிறுவன் மேல் கருணை கொண்டு, அவனது பிறவி ஊனத்தை குணமாக்கிய இத்தலத்து இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Similar News