ஆன்மிகம்

இதய நோய்களைத் தீர்க்கும் இருதயாலீஸ்வரர் கோவில் - திருநின்றவூர்

Published On 2016-09-22 02:37 GMT   |   Update On 2016-09-22 02:37 GMT
இருதயத்தால் கட்டிய ஆலயம் என்பதால் இருதய தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் இங்கே வந்து இருதயாலீஸ்வரரையும், இறைவி மரகதாம்பாளையும், பூசலாரையும் வேண்டிக்கொண்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
ஏழாம் நூற்றாண்டில் திருநின்றவூர் எனும் தலத்தில் மறையவர் குலத்தில் உதித்தார் பூசலார் எனும் சிவபக்தர். வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும், தினமும் அங்குள்ள லிங்கம் ஒன்றைத் தரிசித்து வந்தார். கூரையற்று அந்த இறைவன் மழையிலும், வெயிலிலும் நனைவதைக் கண்டு மனம் வருந்தினார். 

அந்த ஊரில் சிவ பெருமானுக்கு ஆலயம் கட்ட யாருமே முன் வராத நிலையில் எப்படியேனும் ஈசனுக்கு கோயில் கட்ட வேண்டுமென்று பேரவா கொண்டிருந்தார். செங்கற்களாலும் கல்லாலும் கட்டினால்தான் கோயிலா என்னும் கேள்வி அவர் மனதில் உதித்தது. கையில் பொருளில்லாமல் வெறும் மனக்கோயில் கட்டினால் என்ன என்று கேட்டுப் பார்த்தார். மனக்கோயில் கட்ட முடியுமா என்று மற்றவர்கள் கேலி செய்தார்கள். அந்த சொற்களையே நினைத்துக்கொண்டிருந்த அவருக்குள் ஒரு ஞானம் பிறந்தது. மனதில் ஒரு வைராக்கியத்தை உருவாக்கியது.

அவர் மனதிற்குள் கோயில் கட்டத் தொடங்கினார். ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிவபெருமானை நோக்கி வணங்கி விட்டு தன்னிடம் ஏராளமான செல்வம் இருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு, சிவனை மனதில் இருத்தி மனதுக்குள்ளேயே அனைத்து வசதிகளும் கொண்ட ஆலயத்தை உண்மையிலேயே கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அத்தனை ஆண்டுகள் மனதாலேயே ஆலயத்தை வடிவமைக்கத் தொடங்கினார். 

செங்கல் இல்லாவிடின் என்ன, கற்கள் இல்லாவிடின் என்ன, பொருள் இல்லாவிடின் என்ன, இவை இல்லாமலே ஆழ்ந்த பக்தியை மூலதனமாக்கி, கோயில் கட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக தன் மனதுக்குள்ளேயே கோயிலை வடிவமைத்து முழுதாகக் கட்டி முடித்தார்.

அப்படிக் கட்டி முடித்த கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த ஒரு நன்நாளையும் குறித்தார். அதேநேரம் காஞ்சியிலும் ஒரு ஆலயம் உருவானது. உலகுக்கே ஒரு உன்னதக் கோயிலாக அதை நிர்மாணித்துக்கொண்டிருந்தவன் பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன். அந்த கைலாசநாதர் ஆலயம் அவன் மனதுக்கு மிகவும் திருப்தியாக கோயில் அழகுற மிளிர்ந்தது.

தான் பெருமையுடன் உருவாக்கிய கோயிலுக்குக் குடமுழுக்கு வைபவத்துக்கு நாள் குறித்தான் மன்னன். மறுநாள் குடமுழுக்கு, வெகுநாட்கள் கழித்து அன்று மனத்திருப்தியுடன் கண்ணயர்ந்தான். அவன் கனவில் கயிலைநாதன் தோன்றி ‘நாளை திருநின்றவூரில் என் பக்தனொருவன் கட்டிய கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்துகிறான். 

நான் அங்கே செல்ல வேண்டும். அதனால் நீ வேறொரு நாள் குறித்தால் அந்த நன் நாளில் நான் வருகிறேன்’ என்று கூறி மறைந்தார். அதைக் கேட்டு திடுக்கிட்டு விழித்த மன்னன் குடமுழுக்கு பணியை நிறுத்த ஆணையிட்டுவிட்டு திருநின்றவூருக்கு புறப்பட்டான். கோயிலைத் தேடி அலைந்து களைத்துப் போனான். எங்கும் கோயிலைக் காணவில்லை. 

ஒரு விவசாயி, ‘இங்கே பூசலார் என்றொருவர் கோயில் கட்டவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார், இலுப்பை மரத்தடியில் பித்துப் பிடித்தாற் போல ஒருவர் இருப்பார், அவர்தான் பூசலார், அவரைப் பார்த்தால் விவரம் தெரியும்,’ என்று கூறவே தேடி அலைந்து பூசலாரைக் கண்டான் மன்னன். ‘ஆலயம் எங்கே?’ என்று கேட்டான். ‘இதோ என் மனதுக்குள்ளே,’ என்றார் பூசலார். பொருள் இல்லாத காரணத்தால் என் மனதால், பக்தியையும் ஞானத்தையும் குழைத்து மனதுக்குள்ளேயே ஆலயம் அமைத்திருக்கிறேன் என்றார். 

அவருடைய பக்தியை வியந்து அவருடைய இருதயத்தில் கட்டிய கோயிலுக்கு பூசலாரின் விருப்பப்படி திருநின்றவூரில், பக்தவத்சலப் பெருமாள் ஆலயத்தின் அருகில் சிவாலயம் எழுப்பி இருதயாலீஸ்வரர் ஆலயம் என்று அதற்குப் பெயரிட்டு பூசலார் குறித்த நாளிலேயே குடமுழுக்கும் செய்வித்தான். அதன் பின்னரே காஞ்சிக்கு சென்று கயிலாயநாதர் கோயிலுக்கும் குடமுழுக்கு செய்தான்.

இந்த இருதயாலீஸ்வரர் கோயிலின் கருவறையில் ஈசனாரின் லிங்கத் திருமேனிக்கு அருகே பூசலாரும் காட்சி தருகிறார். இருதயத்தால் கட்டிய ஆலயம் என்பதால் இருதய தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் இங்கே வந்து இருதயாலீஸ்வரரையும், இறைவி மரகதாம்பாளையும், பூசலாரையும் வேண்டிக்கொண்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். 

இறைவன் லிங்க ரூபமாகவும், மரகதாம்பாள் நின்ற திருக்கோலத்தில், நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இருதயாலீஸ்வரரின் விமானம் கஜப்ருஷ்ட விமானமாக தூங்கானை மாடவடிவில் அமைந்துள்ளது. ( இருதய நோய் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகள் பூரண குணமாக இங்கு வந்து வேண்டிக் கொள்கிறார்களாம்.) 

சென்னை-திருவள்ளூர் ரயில்/சாலை மார்க்கத்தில் அம்பத்தூரைக் கடந்து திருநின்றவூரை அடையலாம். 

ஆலயத் தொடர்புக்கு : 94441 64108.

Similar News