ஆன்மிகம்

குலசை முத்தாரம்மன் கோவிலில் விரதத்தை தொடங்கிய பக்தர்கள்: அக்டோபர் 1-ந்தேதி தசரா திருவிழா தொடக்கம்

Published On 2016-08-05 13:27 IST   |   Update On 2016-08-05 13:27:00 IST
அக்டோபர் 1-ந்தேதி தசரா திருவிழா தொடங்குகிறது. குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுகின்றனர்.

இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் கொடியேற்றுத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடக்கிறது. 10-ம் திருநாளான 10-ந் தேதி (திங்கட்கிழமை) இரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.
தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் பல்வேறு நாட்கள் விரதம் கடைபிடிக்கின்றனர்.

விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று கோவிலுக்கு சென்று விரதத்தை தொடங்கினர். பக்தர்கள் கடலில் புனித நீராடி, புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்றனர். பின்னர் அம்மன் பாதத்தில் வைக்கப்பட்ட துளசி மாலையை கோவில் அர்ச்சகர், பக்தர்களுக்கு அணிவித்தார்.
விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்களது ஊரில் உள்ள கோவில் வளாகத்தில் ஓலை குடிசையாலான பிறை அமைத்து தங்கியிருப்பார்கள். அங்கு தினமும் ஒருவேளை பச்சரிசி சாதம் மட்டும் சாப்பிட்டு அம்மன் பெயரை உச்சரித்தும், அம்மன் புகழ்பாடியும் வழிபடுவார்கள்.

தசரா திருவிழா கொடியேற்றத்துக்கு முந்தின நாள் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். கொடியேற்றத்துக்கு பின்னர் பல்வேறு ஊர்களில் விரதம் இருந்து வரும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் சென்று காப்பு அணிவார்கள்.

பின்னர் பக்தர்கள் சிவன், பிரம்மன், விஷ்ணு, கிருஷ்ணர், முருகபெருமான், அனுமார் உள்ளிட்ட சுவாமி வேடங்களையும், குறவன், குறத்தி, அரக்கன், போலீஸ், நர்ஸ் உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து, 10-ம் திருநாள் இரவில் கோவிலில் வழங்குவார்கள்.

Similar News