ஸ்லோகங்கள்
திருமூலர்

திருமூலர் அருளிய திருமந்திரத்தில் 4 பாடல்கள்

Published On 2022-01-27 06:58 GMT   |   Update On 2022-01-27 06:58 GMT
அன்பின் வடிவமாக சிவபெருமான் இருக்கிறார் என்பதை தத்துவார்த்தமாக எடுத்துரைத்த திருமூலர், அந்த ஈசனை கைப்பற்றிச் சென்றால், முக்தியை அடையலாம். மீண்டும் பிறக்கும் நிலை வராது என்பதையும் சொல்கிறார்.
பாடல்:-    

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தைப்
பேணிப் தொழுதென்ன பேறு பெற்றாரே.

விளக்கம்:- சிவபெருமான் மாணிக்கமாகவும், சக்திதேவி அந்த மாணிக்கத்தின் உள்ளே விளங்கும் மரகத ஒளியாகவும் உள்ளனர். அம்மையே இறைவனுக்கு திருமேனி என்பதால், மரகதமாய் விளங்குகிறார். பொன்னம்பலமாகிய மன்றத்தில் ஈசனான பெருமானின் திருநடனத்தைக் கண்டு தொழுது போற்றுபவர்கள், பெறும் பேற்றை என்னவென்று சொல்வது...

பாடல்:-

இருவினை நேரொப்பில் இன்னருள் சக்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தரும் எனும் ஞானத்தால் தன்செயல் அற்றால்
திரிமலம் திரிந்து சிவன் அவன் ஆமே.

பொருள்:-

நன்னெறிகளில் உள்ளம் ஒன்றியிருக்கும்போது, நல்வினைப் பயனும், தீவினைப் பயனும் ஒருவரை அணுகினால், உடல்தான் அந்த வினைகளை எதிர்கொள்ளும். அவற்றை உள்ளம் அனுபவிக்காது. அப்போது சக்தியின் அருள், குருவாக வந்து ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கும். அந்த நிலையில் நம் ஜீவனானது, சிவன் என்று மாறிப்போகும்.

திருமூலர் என்னும் மகா முனிவரால் இயற்றப்பட்ட திருமந்திர நூல், சிவபெருமானைத் தொழும் சைவ நெறிகளை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. உலக உயிர்களிடத்தில் அன்பை செலுத்தும் உயர்வானவராக சிவபெருமான் இருக்கிறார். அவரே உயிர்களாகவும் இருக்கிறார் என்பதைச் சொல்லும் திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னும் மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்னமயன் என்று அறிந்து கொண்டேனே.

விளக்கம்:-

சிவபெருமானை என்னுடைய உள்ளத்தில் நினைத்தவுடன், அவர் உயிர்கள் அனைத்தின் நிலையை உணர்ந்து செயல்படுபவர் என்பதை அறிந்துகொண்டேன். அதே போல் மறைகள் அனைத்தும் அந்த ஈசனையே தொழுது போற்றுகின்றன. என்னுள்ளே இருக்கும் சோர்வுபடாத உள்ளொளி மிக்க விளக்காகவும் அந்த சிவனே இருக்கிறார். அவர் இயற்கையிலேயே பேரறிவானவர் என்பதையும் அறிந்து கொண்டேன்.

பாடல்:-

வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து
நீ ஒன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
தீ என்று இங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்று இங்கு என்னைப் பிறர் தெளியாரே.

விளக்கம்:-

வாய் ஒன்றைச் சொல்லும் வகையிலும், மனம் வேறு சிந்திக்கும் வகையிலும், அதற்கு நேர்மாறாக செயல்படும் விதத்திலும் வாழ்வது என்பது தகுந்ததல்ல. சொல், சிந்தனை, செயல் ஆகிய மூன்றும் ஒன்றியிருக்கும் நிலைதான் உறுதியான வெற்றியைப் பெற்றுத் தரும். பெருமானே.. நீ தீயின் வடிவம் என்பதை நான் தெரிந்து தெளிவு பெற்றுவிட்டேன். அதில் உறுதியில்லாதவர்கள் அனைவரும், என்னை பேய் பிடித்து அலைபவன் என்கிறார்கள்.
Tags:    

Similar News