ஸ்லோகங்கள்
ஆஞ்சநேயர்

பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் தரும் ஆஞ்சநேயர் துதி...

Published On 2022-01-01 04:45 GMT   |   Update On 2022-01-01 08:33 GMT
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக்காப்பான்

- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.

இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே” எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.

முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர் என்பதனைக் குறிக்கும்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும்.

அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை) கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.

 ராமபக்தனான ஆஞ்சநேயர் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பார் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருள்.

 ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம். ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர். அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!
Tags:    

Similar News