ஆன்மிகம்
தசரா பண்டிகைக் கொண்டாட்டங்கள்...

தசரா பண்டிகைக் கொண்டாட்டங்கள்...

Published On 2019-09-28 08:17 GMT   |   Update On 2019-09-28 08:17 GMT
இந்தியாவின் பல பகுதிகளிலும் தசரா அல்லது விஜயதசமித் திருவிழாவாக தீயதை அழித்து நல்லதை வரவேற்பதைக் குறிக்கும் விழாபாடாக இந்து மக்களால் பெருவாரியாகக் கொண்டாடப்படுகின்றது.
இந்தியாவின் பல பகுதிகளிலும் தசரா அல்லது விஜயதசமித் திருவிழாவாக தீயதை அழித்து நல்லதை வரவேற்பதைக் குறிக்கும் விழாபாடாக இந்து மக்களால் பெருவாரியாகக் கொண்டாடப்படுகின்றது.

விஜய தசமி என்ற சொல்லுக்கு பத்தாவது நாள் கொண்டாடப்படும் வெற்றி என்பதே பொருளாகும். தசரா என்ற சொல்லும் இதே பொருளைக் குறிக்கின்றது. தென்னிந்தியாவில் நவராத்திரி விழாவாகவும், வங்காளம் மற்றும் வட இந்தியாவில் துர்கா உத்சவமாகவும் கொண்டாடப்படுகின்றது.

தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமியானது அனுசரிக்கப்படுகின்றது. முந்தைய ஒன்பது நாட்களும் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகின்றது. தீமைக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் இப்புனிதத் திருநாளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள்.

வங்காளத்தில் துர்கையானவள் அரக்கன் மகிசாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனைக் கொன்ற பத்தாம் நாள் வெற்றியை மக்கள் விஜயதசமித் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். உலக தர்மத்தைக் காக்க அரக்கனுடன் போரிட்டு வெற்றியை உலகிற்கு அர்ப்பணித்த துர்க்கையின் திருவுருவமானது ஊரின் பல பகுதிகளிலும் மண்டல்கள் அமைத்து காலை, மாலை பூஜை மற்றும் பஜன், தாண்டியா என்று ஊரே விழாக்கோலம் பூண்டு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

ஒன்பது இரவுகளும் அன்னை துர்க்கையானவள் சைலபுத்திரி, ப்ரம்மச்சாரினி, சந்த்ரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, கால்ராத்ரி, மஹாகெளரி மற்றும் சித்திதாத்ரி ஆகிய ஒன்பது அவதாரங்களில் காட்சியளிக்கிறாள்.

புலி, சிங்கம், கழுதை மற்றும் காளை போன்ற விலங்குகளை வாகனமாகக் கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றாள். நவராத்திரி, தசரா, துர்கா பூஜை மற்றும் துர்கா அஷ்டமி என்ற பெயர்களில் இவ்விழா மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும், பத்தாம் நாள் துர்க்கையின் திருவுருவமானது தண்ணீரில் கரைக்கப்படுகின்றது.

வட இந்தியாவில், விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர், ராவணனைக் கொன்ற நாளின் வெற்றியை மக்கள் ராம்லீலா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். தசராவின் பத்தாவது நாள் கொண்டாட்டமாக ராம்லீலா அனுஷ்டிக்கப் படுகின்றது. அன்றைய தினம், ராவணன், கும்பகர்ணன் மற்றும் ராவணனின் மகன் மேகநாதன் ஆகிய மூன்று கொடும்பாவிகளை எரிக்கும் நிகழ்ச்சியுடன் தசரா நிறைவடைகின்றது.

தமிழ்நாட்டில் நவராத்திரித் திருவிழாவது தனித்துவமாகக் கொண்டாடப் படுகின்றது. பெரும்பாலான வீடுகளில் பொம்மைக் கொலுக்கள் வைத்தும், இன்னும் பல வீடுகளில் சரஸ்வதி பூஜை, விஜயதசமித் திருநாளாகவும் கொண்டாடப்படுகின்றது.

மஹாளய அமாவாசையன்று கலசம் வைத்து பொம்மைக் கொலுவைத் துவங்குகிறார்கள். 3, 5, 7, அல்லது 9, 11 என்று அவரவர் வசதிக்கேற்ப படிகள் அமைக்கப்பட்டு அதில் தெய்வங்கள், மகான்கள், முனிவர்கள், தசாவதாரம், அஷ்டலஷ்மி, செட்டியார், மரப்பாச்சி, விலங்குகள், மரம், செடி, கொடிகள் பொம்மைகளை வரிசையாக வைத்து காலை, மாலை பூஜை, பாடல்கள் என்று உறவினர்கள், தெரிந்தவர்களை அழைத்து தாம்பூலம் வழங்கி ஒன்பது நாளும் ஒன்பது விதமான சுண்டல், பலகாரங்களுடன் மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நவராத்திரி விழாவின் முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் தைரியம் மற்றும் அருளைப் பெறுவதற்காகவும், அடுத்த மூன்று நாட்கள் லஷ்மியின் செழிப்பைப் பெறுவதற்காகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியிடமிருந்து கலை, கல்வி, அறிவு, ஞானத்தைப் பெறுவதற்காகவும் கொண்டாடப் படுவதா ஐதீகம்.

கர்நாடக மாநிலத்தின் மைசூரில் கொண்டாடப்படும் தசராத் திருவிழாவைக் காண இந்தியாவின் பல பாகங்களிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இவ்விழாவானது கர்நாடக மாநிலத்தின் மிகவும் முக்கியமான மற்றும் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

400 வருடங்களுக்கும் மேலாக மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது. மைசூரு அரண்மனை முழுவதும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டும், இசை மற்றும் நடனக் கச்சேரிகள் நடத்தப்பட்டும் ஊரே விழாக்கோலம் பூண்டு அற்புதமாகக் காட்சியளிக்கும்.

பலவிதமான நகை, கைவினைப் பொருட்கள், துணி மணிகள் மற்றும் நாவிற்குச் சுவையான தின்பண்டங்களுடன் மிகப் பெரிய கண்காட்சிகளானது நடத்தப் படுகின்றது.

யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் குதிரைகள் மிகவும் அழகாக அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுத்து வீதிகளில் அழைத்து வரப்படும் அணிவகுப்பானது இவ்விழாவின் மிகச்சிறப்பு அம்சமாகக் கருதப்படுகின்றது. மேலும், விஜயசாமுண்டேஸ்வரி அன்னையை நன்கு அலங்கரித்து தங்க மண்டபத்தில் வைத்து யானையின் மேல் அமர்த்தி நடத்தப்படும் ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிப்பது மேலும் சிறப்பாகக் கருதப்படுகின்றது.

Tags:    

Similar News