முக்கிய விரதங்கள்

வெற்றி தரும் விஜயதசமி விரதம்

Update: 2022-10-05 01:31 GMT
  • சக்தியை வழிபடத்தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி.
  • இன்று விரதம் இருந்து அன்னையை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் பெருகும்.

விஜயதசமி என்றாலே வெற்றி திருநாள் ஆகும். அசுரனை அழித்த அன்னையின் வெற்றியே அது. அந்த திருநாளில் நாம் எந்த காரியத்தை தொடங்கினாலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

சிவனை வழிபடத்தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத்தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரதமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோவிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்றும் போற்றப்படுகிறது.

இந்த நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலு வைத்து நிவேதனம் படைத்து வழிபாடு செய்வார்கள். இதில் அக்கம், பக்கத்து வீடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொள்வார்கள். அதே போல் அம்மன் கோவில்களிலும் நவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகளும், கொலு பூஜைகளும் நடைபெறும்.

தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருட்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற 3 சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாக தோன்றி மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை, சண்ட முன்டனை வதம் செய்த நன்னாள்தான் விஜயதசமி. அன்று விரதம் இருந்து அன்னையை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

நவராத்திரியின் 9 நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி 10-ம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே விஜயதசமி என்றும் கூறப்படுகிறது. இந்த நாளில் புதிதாக தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

Tags:    

Similar News