முக்கிய விரதங்கள்

நற்பலன்களைத் தரும் நவராத்திரி விரத வழிபாடு இன்று ஆரம்பம்

Update: 2022-09-26 04:38 GMT
  • அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் ‘நவராத்திரி’.
  • நவராத்திரி விரத வழிபாட்டின் மூலமாக கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

26-9-2022 முதல் நவராத்திரி ஆரம்பம்

சிவனை வழிபட ஒரு ராத்திரி, 'சிவராத்திரி'. அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் 'நவராத்திரி'. ஆண்டு முழுவதும் அம்பாளை வழிபடுவதை விட, இந்த ஒன்பது தினங்களில் வழிபாடு செய்தாலே சகல சவுபாக்கியங்களையும் பெற்றுவிட முடியும். நவராத்திரி விரத வழிபாட்டின் மூலமாக கிடைக்கும் சில பலன்களை இங்கே சிறிய தொகுப்பாக பார்க்கலாம்.

* நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை, தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் அனைவரும், விரதம் இருந்து கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

* நவராத்திரி பூஜையின் ஒன்பது நாட்களும், ஈசனும் அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை காண்பவர்களுக்கு, நவராத்திரி பூஜை செய்ததற்கான பலன் முழுமையாக கிடைக்கும்.

* அம்பாள் ஒரு சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரியின் அனைத்து நாட்களிலும், அம்பாளை சிறப்பிக்கும் வகையிலான பாடல்களில் ஒன்றையாவது பாட வேண்டும்.

* நவராத்திரி நாட்களில் பகல் வேளையில் சிவபெருமானையும், இரவு நேரத்தில் அம்பிகையையும் பூஜை செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் பகலில் ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால், அளவில்லாத பலன்களைப் பெறலாம்.

* இன்றைய காலகட்டத்தில் வீட்டில் கோலமிடும் பலரும், சுண்ணாம்பு மாவைதான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நவராத்திரியின் ஒன்பது தினங்களில் மட்டுமாவது அரிசி மாவை பயன்படுத்தி கோலமிட வேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து அருள்வாள். வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

* நவராத்திரி ஒன்பது நாள் பூஜையையும் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள். சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் நைவேத்தியம் படைப்பது அவசியம். நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

* நவராத்திரி காலத்தில் முடிந்தவரை தேவியின் நாமத்தை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். 'ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நமஹ' என்று நூற்றியெட்டு முறை சொன்னாலே போதும். சிறப்பான பலன் கிடைக்கும்.

* நவராத்திரியில் வரும் வெள்ளிக்கிழமை அன்று ஐந்து சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து, புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடும்.

* நவராத்திரியில் வரும் திங்கட்கிழமை, லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

* தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தனித்து தானம் செய்வதை விட, பலர் கூட்டாக சேர்ந்து மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் ஏராளமான பேர்களுக்கு தானமாக அளிப்பது நன்மைகளை வழங்கும்.

* நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதிஅன்று ஹயக்கிரீவரை வழிபட்டால் ஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகஸ்ர நாமத்தையும் ஓதுவது சிறப்பான பலன்களைத் தரும்.

* விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

Tags:    

Similar News