முக்கிய விரதங்கள்

நவராத்திரி ஒன்பது இரவுகளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால்...

Published On 2022-09-27 04:12 GMT   |   Update On 2022-09-27 04:12 GMT
  • தேவியின் அருள் கிடைக்க, தேவர்கள் கடும் தவம் செய்தனர்.
  • கொலுப்படிகளை ஒற்றைப்படையில் அமைக்க வேண்டும்.

'நவம்' என்பதற்கு 'ஒன்பது' என்றும், 'ராத்திரி' என்பதற்கு 'இரவு' என்றும் பொருள். ஒன்பது இரவுகளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டுவந்தால் பொன், பொருள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த அற்புதமான நவராத்திரி திருநாள், புரட்டாசி 9-ம் நாள் (26.9.2022) திங்கட்கிழமை தொடங்குகிறது.

ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான், கல்வியால் செல்வம் ஈட்டி, ஈட்டிய செல்வத்தை வீரத்தால் காப்பாற்றி வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த இயலும். எனவே தான் 'வீரம்' தரும் துர்க்கா தேவியை முதல் மூன்றும் நாட்களும், செல்வம் தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், கல்விச் செல்வம் தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று தினங்களும் பூஜைசெய்து வழிபட வேண்டும். அங்ஙனம் வழிபட்டால் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறத் தொடங்கும்.

தேவியின் அருள் கிடைக்க, தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில், எல்லா பொருட்களும், உயிர்களும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக நாம் கொலு வைத்துக் கொண்டாடுகிறோம். கொலுப்படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப்படையில் அமைக்க வேண்டும். படிக்கட்டுகளில் வெள்ளை அல்லது மஞ்சள் துணிகளை விரிக்க வேண்டும். முதல் படிக்கட்டில் கலசத்தை வைக்க வேண்டும். உயரமான பீடத்தில் பராசக்தியை வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்கரித்துக் கொண்டாட வேண்டும்.

கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிரினங்களான புல், பூண்டு, செடி, கொடி தாவர வகைகளை வைக்க வேண்டும். இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட ஜீவ ராசிகளான நத்தை, சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான், நான்காவது படியில் நான்கறிவு கொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவ ராசிகளின் பொம்மைகளையும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள், பறவைகளின் பொம்மைகளையும், ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள், நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகளையும் வைக்க வேண்டும். ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்ய வேண்டும். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும், அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலுபீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

சரஸ்வதி பூஜை அன்று பூஜையறையில் புத்தகங்கள், எழுதுகோல், கல்வி சம்பந்தப்பட்ட பொருட்கள், தொழிற்கருவிகள் போன்றவற்றை வைத்து வழிபட வேண்டும். மறுநாள் தேவி வெற்றி பெற்ற திருநாளான விஜயதசமியிலும் வழிபாடுகள் செய்தால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்

Tags:    

Similar News