முக்கிய விரதங்கள்

இன்று லட்சுமி பஞ்சமி: விரதம் இருந்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்...

Published On 2023-03-26 02:03 GMT   |   Update On 2023-03-26 02:03 GMT
  • குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்கும்.
  • லட்சுமி சுலோகம் சொல்லி வழிபட வேண்டும்.

ஸ்ரீவிஷ்ணுவின் விருப்பத்தால் தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து திருப்பாற் கடலை கடைந்தனர். அப்போது பாற்கடலில் இருந்து ஸ்ரீ மகாலட்சுமி தோன்றினாள். அந்த நன்நாளே ஸ்ரீபஞ்சமி-லட்சுமி பஞ்சமி எனப்படுகிறது. இன்று (ஞாயிறு) லட்சுமி பஞ்சமி தினமாகும். இன்று விரதம் இருந்து ஸ்ரீ விஷ்ணுவுடன் ஸ்ரீ லட்சுமி தேவியை பூஜை செய்து மல்லிகைப் பூவால் லட்சுமி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து லட்சுமி சுலோகம் சொல்லி வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும், ஏழ்மை விலகும்.

இன்று பஞ்சமியில் விரதம் இருக்கலாம். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக தொழில் வளம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் வறுமை நீங்கும். குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்குவதும், சுபநிகழ்ச்சிகள் நடப்பதும், வீடு, வாகனம் முதலிய பொருள் சேர்க்கை ஏற்படும்.

இன்று காலை எழுந்தவுடன் வீட்டை தூய்மை செய்து, வீட்டில் உள்ள அனைவரும் நீராடி விட்டு பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதிலே கோலம் போட்டு, கலசத்தை ஆவாகனம் செய்ய வேண்டும். அந்த கலசத்தில் திருமகளுக்கான லட்சுமி மந்திரங்களைச் சொல்லி ஆவாகனம் செய்ய வேண்டும். "இந்த கலசத்தில் மகாலட்சுமி தாயே வந்து அமர வேண்டும். எங்கள் எளிய பூஜையை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைய வேண்டும்" என்று மனதார பிரார்த்தனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

இன்று குதிரை பூஜை தினம்

ஹயம் என்றால் குதிரை. குதிரையை பூஜிக்க வேண்டிய நாளே ஹய பஞ்சமி. தேவ அசுரர்கள் மந்திரமலையை மத்தாக்கி வாசுகி என்னும் பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்த போது கடலில் இருந்து உச்சைஸ்ரவஸ் என்னும் பறக்கும் சக்தி உடைய தேவக்குதிரை தோன்றிய நாள்தான் இன்று பஞ்சமி நாள். எனவே இன்று குதிரையை பூஜித்து, குதிரைக்கு கொள்ளு தானியத்தை சாப்பிடதர வேண்டும். மேலும் குதிரை வடிவில் வந்து அருள்புரிந்த ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியை ஆராதிக்கலாம். இதனால் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வியாபார லாபமும் ஏற்படும்.

Tags:    

Similar News