முக்கிய விரதங்கள்

காமதா ஏகாதசி... விரதம் இருந்தால் கஷ்டங்கள் தீரும்...

Published On 2023-05-01 05:40 GMT   |   Update On 2023-05-01 05:40 GMT
  • சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும்.
  • நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

சகல பாவங்களையும் நீக்கி நம்பிக்கை ஒளியை ஏற்ற வல்ல அற்புத தினமே ஏகாதசி விரதம். சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி "காமதா ஏகாதசி" எனப்படுகிறது. இந்த ஏகாதசி அன்று விரதத்தைக் கடைப்பிடித்தால் அது ஏழு ஜன்மப் பாவங்களையும் போக்கிவிடும் என்று கூறுகிறது புராணம்.

புராணங்களின் படி லலிதன் என்ற கந்தர்வன், ஒரு சாபத்தின் காரணமாக ராட்சஸனாக மாறினான். அவனது மனைவியான லலிதை சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் இந்த காமதா ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து, பெருமாளின் அருளால் கணவனின் சாபம் நீங்க செய்தாள். நீங்கள் விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் விரதம் இது. எனவே மிகுந்த நம்பிக்கையோடு இந்த விரதம் இருப்பவர்களுக்கு நன்மைகள் பல ஏற்படும் என்பது பெரியோர்களின் வாக்காகும்.

இந்த சித்திரை வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் ஊறவைத்த தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

சாஸ்திரப்படி அன்று பகல் இரவு இருவேளையும் தூங்கக் கூடாது. கண்டிப்பாகப் பகலில் தூங்கவே கூடாது. நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தவிப்பவர்களுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கும். குடும்ப பொருளாதார நிலை உயரும்.

இன்று `ஜய ஜய ஸ்ரீ சுதர்ஸனா... ஜய ஜய ஸ்ரீ சுதர்ஸனா' என்று 108 முறை உச்சரிப்பது நல்லது. இதன் மூலம் தீமைகள் தீர்ந்து நன்மைகள் அதிகரிக்கும்.

Tags:    

Similar News