ஆன்மிகம்
சிவன்

புண்ணியத்தை அதிகரிக்கும் பிரதோஷ விரத வகைகள்

Published On 2021-01-25 07:01 GMT   |   Update On 2021-01-25 07:01 GMT
மாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த பிரதோஷ தினத்தின் விரதம் இருந்து மாலை வேளையில், நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும்.
பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் சேர்த்து வழிபடுவதில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது. மாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த பிரதோஷ தினத்தின் மாலை வேளையில், நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும். திரயோதசி திதியின் மாலை நேரமான 4.30 மணி முதல் 6.30 மணி வரையான காலகட்டமே ‘பிரதோஷ காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில்தான் நாம் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இது நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவபெருமான் நடனம் ஆடிய கால நேரம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பிரதோஷத்தைப் பொறுத்தவரை, 20 வகையான பிரதோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் முக்கியமான 5 வகை பிரதோஷத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தினசரி பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் பகலும், இரவும் சந்திக்கின்ற நேரத்தை ‘சந்தியா காலம்’ என்பார்கள். அந்த காலமானது மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இதனை ‘பிரதோஷ காலம்’ என்றும் சொல்வார்கள். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு நாளும் இந்த கால நேரத்தில் சிவனையும், நந்தியையும் வழிபாடு செய்யலாம். நித்தய பிரதோஷம் என்றும் அழைக்கப்படும் இந்த பிரதோஷ கால வழிபாட்டை, ஒருவர் தொடர்ந்து 5 வருடங்கள் செய்து வந்தால், அவருக்கு நிச்சயமாக முக்தி கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வருவது ‘திரயோதசி’ திதி. இந்த வளர்பிறை திரயோதசி திதியே, ‘பட்சப் பிரதோஷம்’ ஆகும். பட்சப் பிரதோஷ தினத்தின் மாலை நேரத்தில், பட்சி லிங்க வழிபாடு (பறவையோடு சம்பந்தப்பட்ட லிங்கம் அமைந்த மயிலாப்பூர், மயிலாடுதுறை போன்ற திருக் கோவில்களில்) செய்வது சிறப்பான பலன்களை நமக்குப் பெற்றுத்தரும்.

மாதப் பிரதோஷம்: பவுர்ணமிக்குப் பிறகு வரும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் திரயோதசி திதியை ‘மாதப் பிரதோஷம்’ என்பார்கள். இந்த தேய்பிறை திரயோதசி திதியின் மாலை நேரத்தில்‘பாணலிங்க’ வழிபாடு (பல்வேறு லிங்க வகைகளில் பாண லிங்கம் ஒரு வகை) செய்வது உத்தமமான பலனை அள்ளித் தரும்.

நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ வழிபாடு வரும் திரயோததி திதி அன்று ஏதாவது ஒரு நட்சத்திரம் வரும். அப்படி வரும் நட்சத்திரத்திற்கு உரிய சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்வதையே, ‘நட்சத்திரப் பிரதோஷம்’ என்கிறார்கள்.

பூரண பிரதோஷம்: ஒரு சில நாட்கள் ஒரே நாளில் இரண்டு திதிகள், அதாவது காலையில் ஒரு திதி... அதன்பிறகு ஒரு திதி என்று வரும். அப்படி திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேர்ந்து வராமல், திரயோதசி திதி மட்டுமே இருக்கும் நாளில் வரும் பிரதோஷத்தை ‘பூரண பிரதோஷம்’ என்று சொல்வார்கள். இந்தப் பிரதோஷத்தின் போது, சுயம்பு லிங்கம் அமைந்த கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் பலன்கள் இருமடங்காகக் கிடைக்கும்.
Tags:    

Similar News