ஆன்மிகம்
துளசி பூஜை

இல்லறத்தை இனிமையாக்கும் பிருந்தாவன துவாதசி விரதம்

Published On 2020-12-04 03:54 GMT   |   Update On 2020-12-04 03:54 GMT
துவாதசி புண்ணிய விரதத்தை பெண்கள் அனைவரும் அனுஷ்டிப்பது மிகுந்த பலன்களை அளிக்கும். கணவன் - மனைவிக்குள் இந்த விரத பலனால் ஒற்றுமை உண்டாக்கும். பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேர்வர் என்றும் பெரியோர்கள் கூறுவர்.
பிருந்தாவன துவாதசி எனப்படும் துளசிமாட துவாதசி நாள் அன்று துளசிக்குத் திருமணம் செய்துவைப்பது நன்மை பயக்கும் என்பர். மகாலட்சுமியின் அம்சம் நிறைந்துள்ள துளசிதேவியானவள் செல்வவளத்தை அளிப்பவள்.

துளசியின் மகிமை சொல்லிலே அடங்காதது என்பர். கண்ணனோடு பிறந்து அவனோடு வளர்ந்த கோபிகைப் பெண்ணான பிருந்தா திருமகளுக்கு இணையான பெருமை கொண்டவள். கண்ணனையே மணக்க வேண்டும் என்று வைராக்கியம் கொண்டு வாழ்ந்தவள் பிருந்தா. அதற்காக 20,000 ஆண்டுகள் தவமிருந்து விதிப் பயனால் மறு பிறவியில் சங்கசூடன் என்னும் அசுரனை மணந்து இறுதியில் திருமாலின் திருமார்பில் எப்போதும் தவழும் துளசியானாள். துளசியின் பக்தி தூய்மையானது. திருமால் அடியார்களுக்கு இலக்கணமானது அவள் வாழ்வு. அதனாலேயே திருமால் வழிபாட்டில் துளசி இல்லாமல் எதுவுமே இல்லை என்றானது.

கார்த்திகை மாத சுக்ல பட்ச துவாதசி நாள் 'பிருந்தாவன துவாதசி' என்று வழங்கப்படுகிறது. அன்று, திருமால் பிருந்தாவை திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது. துவாதசி புண்ணிய விரதத்தை பெண்கள் அனைவரும் அனுஷ்டிப்பது மிகுந்த பலன்களை அளிக்கும். குறிப்பாக இல்லறத்தின் மேன்மை சிறந்து விளங்கும் என்பர். கணவன் - மனைவிக்குள் இந்த விரத பலனால் ஒற்றுமை உண்டாக்கும். பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேர்வர் என்றும் பெரியோர்கள் கூறுவர்.

பிருந்தாவன துவாதசி எனப்படும் துளசிமாட துவாதசி நாள் அன்று துளசிக்குத் திருமணம் செய்துவைப்பது நன்மை பயக்கும் என்பர். மகாலட்சுமியின் அம்சம் நிறைந்துள்ள துளசிதேவியானவள் செல்வவளத்தை அளிப்பவள்.

விஷ்ணு ப்ரியா என்று போற்றப்படும் துளசிதேவியை இந்தப் புண்ணிய நாளில் விரதமிருந்து வழிபட வேண்டும். துவாதசியன்று அதிகாலையில் திருமணமானப் பெண்கள் நீராடியபின், துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும். துளசியோடு ஒரு நெல்லி மரக்கன்றை இணைத்து வைத்து இரண்டுக்கும் பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். துளசி செடிக்கு கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்ற நைவேத்தியங்கள் படைத்து, வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் வைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். நெல்லி மரம் மகாவிஷ்ணுவின் அம்சம் என்பதால் இதை துளசி விவாகம் என்றே பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்நாளில் துளசி விவாகம் செய்து வழிபடுவது இல்லறத்தை இனிமையாக்கும் என்பார்கள்.

துளசிச் செடியின் அடியில், திருமாலின் விக்கிரகம் அல்லது படம், சங்கு, சாளக்கிராமம் வைத்து பூஜிக்கலாம். துளசி தேவியே தெய்வ அம்சம் என்பதால் அவளை ஆவாஹனம் செய்ய வேறு எந்த வடிவமும் தேவையில்லை. துளசி மாடத்தின் இரு புறமும் வாழை, மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது. முதலில், கணநாதனுக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். இந்த விதமான பலன்களுக்காக பூஜை செய்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி வழிபட வேண்டும். பூஜையின் முடிவில், ஆரத்தி எடுத்து துளசி தேவியை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்நாளில் மங்கலப் பொருள்களை தானமளிப்பது இரட்டிப்பு பலன்களை அளிக்கும். எந்த தானம் அளித்தாலும் அதோடு துளசியை வைத்துக் கொடுப்பது வழக்கம். தியானத்தில் வீற்றிருக்கும் திருமால் இந்த பிருந்தாவன துவாதசி நாளில்தான் கண் விழிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகை வாஸ்துவுக்கு ஏற்ற நாளாகவும் சொல்லப்படுகிறது. ஆந்திரம், கர்நாடகா மாநிலங்களிலும் இந்தப் பண்டிகை மிக விமரிசையாக நடைபெறுகிறது. கர்நாடகாவில், 'சிக்க தீபாவளி' அதாவது சின்ன தீபாவளி என்று வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கைகளுடன் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.

மாங்கல்ய பலம் பெறவும், விரும்பிய வரன் அமையவும் இந்த விரதத்தை மேற்கொள்வது நல்ல பலன் அளிக்கும். இந்நாளில் மாவிளக்கு ஏற்றியும் வழிபடுவது வழக்கம். இல்லறத்தின் மேன்மையை சிறப்பாகும் இந்த புனித நாளில் மகாவிஷ்ணு மற்றும் துளசிதேவிக்கு உரிய துதிப்பாடல்களை யும் ஸ்லோகங்களையும் பாடி வழிபடுவதால், அந்த வீட்டில் தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; மகிழ்ச்சி பெருகும்.
Tags:    

Similar News