ஆன்மிகம்
காப்புக்கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

கந்த சஷ்டி விரதம்: காப்புக்கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

Published On 2020-11-16 03:26 GMT   |   Update On 2020-11-16 03:26 GMT
முருகனின் அறுபடை வீடுகள் அமைந்துள்ள தலங்களிலும் மற்ற கோவில்களிலும் காப்புக்கட்டி கந்தசஷ்டி விரதத்தை பக்தர்கள் தொடங்கினர்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு நடத்தப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் முக்கியமானதாகும். ஐப்பசியில் வரும் அமாவாசைக்கு மறுநாள் இந்த விழா தொடங்குவது வழக்கம். அதன்படி முருகனின் அறுபடை வீடுகள் அமைந்துள்ள தலங்களிலும் மற்ற கோவில்களிலும் காப்புக்கட்டி கந்தசஷ்டி விரதத்தை பக்தர்கள் தொடங்கினர்.

தேவர்களை துன்புறுத்திய சூரபதுமனை முருகன் வதம் செய்தார். அந்த நாள் கந்தசஷ்டி விழாவாகவும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி 6 நாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து கடைசி நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்த்து தனது விரதத்தை முடிப்பார்கள்.

இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் 6 நாட்களும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். விழா நாட்களில் உள் திருவிழாவாக யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 20-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளில் சூரசம்ஹார விழா மிக சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். வயலூர் முருகன் கோவிலிலும் சூரசம்ஹாரம் நடத்தப்படுவது உண்டு. அதற்கு முன்னதாக சுவாமி தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஆனால் கொரோனா காரணமாக சுவாமி வீதி உலா வருவது நிறுத்தப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News