ஆன்மிகம்
நாக சதுர்த்தி

இன்று ராகு-கேது தோஷம் போக்கும் நாக சதுர்த்தி விரதம்

Published On 2020-07-24 02:22 GMT   |   Update On 2020-07-24 02:22 GMT
நாகதோஷத்தில் இருந்து மீள்வதற்கு விரதம் இருந்து நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்களை பெறலாம் என்பது ஐதீகம்.
24-7-2020 நாக சதுர்த்தி

நவக்கிரகங்களில் கேதுவும், ராகுவும் பாம்பு கிரகங்களாக ஜோதிடம் குறிப்பிடுகிறது. இந்த இரண்டு கிரகங்களாலும் ஏற்படும் நாகதோஷத்தால் மக்கள் பல அவதிக்குள்ளாவதாகவும் ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன. நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமை உள்ளிட்ட பல இன்னல்களை சந்திக்க வேண்டியதிருக்கும். நாகதோஷத்தில் இருந்து மீள்வதற்கு விரதம் இருந்து நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்களை பெறலாம் என்பது ஐதீகம்.

காசியப முனிவரின் மனைவிகளில் இருவரான வினதைக்கும், கத்ருவுக்கும் போட்டி ஒன்று ஏற்பட்டது. இந்திரனிடம் உள்ள குதிரையின் நிறம் வெண்மையா.. கருப்பா.. என்பதாக அவர்களின் வாதம் இருந்தது. யார் சொல்வது சரியோ.. அவர்களுக்கு மற்றவர் அடிமையாக வேண்டும் என்பது அவர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம்.

போட்டியில் வெற்றிபெறுவதற்காக, கத்ரு தனது பிள்ளைகளான நாகர்களிடம் குதிரையின் வால்பகுதியில் போய் ஒட்டிக்கொள்ளும்படி கூறினாள். ஆனால் அதற்கு சில நாகங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபம் அடைந்த அவள், “நீங்கள் அனைவரும் ஜனமேஜயன் நடத்தும் வேள்வியில் விழுந்து அழிந்துபோவீர்கள்” என்று சாபம் கொடுத்தாள். அந்த சாபம் விரைவிலேயே பலிக்கும் படியான ஒரு சம்பவம் நடைபெற்றது.

பாம்புகளின் தலைவனாக விளங்கிய தட்சகன் என்ற கொடிய நாகத்தால் தீண்டப்பட்டு, பரீட்ஷித் என்ற மன்னன் இறந்தான். அவரது மகன் ஜனமேஜயன், தன்னுடைய தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பின் இனத்தையே அழிக்க உறுதி எடுத்தான். அதற்காக வேள்வி ஒன்றை நடத்தினான். அவனது அந்த தீயில் உலகில் உள்ள அனைத்து நாகங்களும் வந்து விழுந்து இறந்துகொண்டிருந்தன. இன்னும் சில நாகங்களே எஞ்சியிருந்தன.

இந்த நிலையில் அஸ்தீகர் என்ற முனிவர், ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் ‘நாக சதுர்த்தி’ தினம் என்று சொல்லப்படுகிறது. எனவே நாக விரதம், ஆடி மாத சதுர்த்தியில் கொண்டாடும் வழக்கம் தோன்றியது. இந்த நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

நாக சதுர்த்தி விரத வழிபாட்டை செய்தால், ராகு-கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்ல பலனைத் தரும். கருட பஞ்சமிக்கு முன்தினத்தில் இந்த நாக சதுர்த்தி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுமண்ணைப் பிரசாதமாக இட்டுக் கொள்வார்கள். மேலும் அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகிய நாகங்களின் பெயர்களைச் சொல்லி வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். 
Tags:    

Similar News