ஆன்மிகம்
சாகம்பரி தேவி

சாகம்பரி தேவியை விரதம் இருந்து வழிபடும் முறை

Published On 2020-07-08 07:28 GMT   |   Update On 2020-07-08 07:28 GMT
சிவாலயங்களில் புரட்டாசி பௌர்ணமியில் அம்பாளுக்குச் செய்யப்படும் சாகம்பரி வழிபாடு, "நிறைமணிக் காட்சி' என்ற பெயரில் நடத்தப்படுகின்றது.
பிரம்மாவை நோக்கித் தவமிருந்து அரிய வரங்களைப் பெற்ற துர்க்கமன் என்னும் அசுரன், உலகில் நடக்கும் அனைத்து புண்ணியங்கள், பூஜைகள் ஆகியவற்றின் பலன்கள் அனைத்தும் தன்னை வந்து அடைய வேண்டும் என்ற வரமும் பெற்றான். அவன் வேதங்களையும் மந்திரங்களையும் கவர்ந்து சென்றதுடன் ஆணவம் அதிகமாகி அனைவருக்கும் பலகொடுமைகள் செய்து வந்தான்.

முனிவர்களும், தவசிகளும் குகை போன்ற மறைவிடங்களில் ஒதுங்கி வாழ்ந்தனர். மழை பொய்த்தது. பயிர்கள் கருகின. தண்ணீருக்கும் உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது, எங்கும் வறட்சியும் பஞ்சமும் தலை விரித்து ஆடின. தேவர்களும் முனிவர்களும் தேவியை வழிபட்டனர். அப்போது சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவியரும் ஒன்றானார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்ய எண்ணம் கொண்டார்கள். அதனால் சாகம்பரி என்னும் உருவை எடுத்தார்கள்.

சாகம்பரி தேவி, தன் தேகத்தில் இருந்து காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகிய ஊண் இல்லாத வஸ்துக்களை உருவாக்கி முனிவர்களுக்கும் யோகிகளுக்கும், தவசிகளுக்கும், மக்களுக்கும் வழங்கினாள். பின்னர் துர்க்கமனை அழிக்கமுடிவெடுத்த சாகம்பரி தேவி, யாகமும் பூஜையும் செய்தால் அதன் பலன் அவனைச் சென்றடையும் என்பதால், தன்னைச் சுற்றி நெருப்பு வளையம் ஒன்றினை உருவாக்கினாள்.

அதன் நடுவில் அமர்ந்து தன் உடலில் இருந்து புதிய சக்தி சேனையை உருவாக்கினாள். 64ஆயிரம் தேவர்கள், வீரர்கள் உருவாயினர். தன்னுடன் அவர்களையும் சேர்த்துக்கொண்டு 9 நாட்கள் துர்க்கமனை எதிர்த்து போரிட்டு அழித்தாள். உலக மக்களின் வேண்டுகோளை ஏற்று முப்பெரும் தேவியரும் ஒன்றாகி துர்க்கமனை அழித்ததால் துர்க்கை; உலகம் முழுவதும் காத்து ரட்சிக்க ஆயிரம் கண்களுடன் தோன்றியதால் சதாக்ஷி (ஆயிரம் கண்ணுடையாள்); பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால் சாகம்பரி எனவும் அன்னை துதிக்கப்படுகிறாள்.

சாகம்பரியின் பலவகை வழிபாட்டு முறை: சாகம்பரி தேவியை மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தராஞ்சல், உத்தரகண்ட், உத்திரபிரேதசம், மேற்கு வங்காளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொண்டாடுவதுடன் தேவிக்கு தனிக் கோயில்களும் உள்ளன. அதுபோன்று தமிழ் நாட்டில், தான்ய லட்சுமி, அன்னலட்சுமி, அன்னபூரணி ஆகிய தெய்வங்களை விரதம் இருந்து வழிபடுகின்றனர்.

சிவாலயங்களில் புரட்டாசி பௌர்ணமியில் அம்பாளுக்குச் செய்யப்படும் இந்த சாகம்பரி வழிபாடு, "நிறைமணிக் காட்சி' என்ற பெயரில் நடத்தப்படுகின்றது. பார்வதியின் வடிவமான அன்னை அங்காளபரமேஸ்வரி சிவனின் கபாலத்தில் அன்னமிடும்போது அன்னபூரணியாகிறாள். அன்னபூரணியாகி அவள் உலகுக்கெல்லாம் அன்னம் அளிக்கின்றாள். உலகிற்கு அன்னமிடுபவர்களுக்கு அவள் கொடுத்த பொருட்களை முதன் முதலாக அவளுக்கே படைத்தல் என்பது மரபு.

புரட்டாசி மாதம் புதன் கிரகத்திற்கு உரிய மாதம். இம்மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஞாயிறன்றும் மேல்மலையனூரிலிருந்து வந்து குடிகொண்டு இருக்கும் ஈரோடு, சத்தியமங்கலம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அதன்படி இவ்வாண்டு ஈரோடு மாவட்டம், கொமாரபாளையம், சத்தியமங்கலம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி தேவிக்கு 21.09.2014 ஆம் தேதி, பஞ்சம் பட்டினி வறுமை ஒழியவும் பூரணத்துவம் எய்தவும் வேண்டி பவானி நதிக்கரையில் அம்பாளுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. மேலும் மூலவருக்கு அஷ்டாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு திருப்பாவாடை என்னும் அன்னம் நிவேதனம் செய்யப்படும்.

புரட்டாசி ஞாயிற்றுக் கிழமையில் விரதம் இருந்து ஸ்ரீ சாகம்பரி தேவியை மகிழ்வித்து வழிபடுவதால் நாட்டில் இயற்கை சமநிலை பெறும். சாகம்பரி தேவியின் பரிபூரண கடாட்சம் நிலைத்து நிற்கும். அன்னையின் அருள்பெற, ஆராட்டு, அபிஷேகம், திருப்பாவாடை மகா யாகத்தில் கலந்துகொண்டு பயன் பெறுவோம்.
Tags:    

Similar News