ஆன்மிகம்
வராஹி அம்மன்

எதிர்ப்புகள் அகல பஞ்சமி திதியில் வராஹி அம்மனுக்கு விரதம்

Published On 2020-06-22 07:41 GMT   |   Update On 2020-06-22 07:41 GMT
பஞ்சமி திதியில் விரதம் இருந்து வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.
சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை.

சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

பஞ்சமி திதியில் விரதம் இருந்து வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.

வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து மகிழ்ந்து அருள்வாளாம் அன்னை!

மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி.

மிளகும் சீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாகச் செய்து விரதம் இருந்து வராஹி தேவியை வணங்கலாம்.
Tags:    

Similar News