ஆன்மிகம்
விஷ்ணு லட்சுமி

விஷ்ணுபதி புண்ணியகால விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்

Published On 2020-06-01 06:57 GMT   |   Update On 2020-06-01 06:57 GMT
ஒரு தடவை விஷ்ணுபதி புண்ணிய கால விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், பல ஏகாதசி விரதங்களை கடைப்பிடித்த பலனை பெறுகிறார்கள் என சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளன.
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1-ந்தேதிகளில் பித்ருக்கள் சாப விமோசன புண்ணிய கால பூஜை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஒரு வருடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வரக்கூடிய விஷ்ணுபதி புண்ணிய நாட்களில் பெருமாளையும், தாயாரையும் வணங்கி வேண்டுதல்களை செய்வது ஐதீகம். தமிழ் மாதக் கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். அது, ஜோதிட ரீதியாக சூரியனின் ஸ்திர ராசி சஞ்சார காலமாகவும் அமைகிறது.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம். இந்த அவதாரத்தை எடுத்த நோக்கம் நிறைவேறிய பின்னரும் கூட நரசிம்மரின் கோபம் குறையவில்லை. அந்த கோபத்தை சமாளிக்க இயலாத அனைத்துத் தேவர்களும், முனிவர்களும், மகாலட்சுமியைச் சரணடைந்து நரசிம்மரின் உக்ரத்தைத் தணிக்க வேண்டினார்கள்.

மகாலட்சுமியும் அவர்களது வேண்டுகோளை ஏற்று, உக்ர நரசிம்மர் அருகில் சென்றாள். அவளது நிழல் நரசிம்மர் மீது பட்டவுடன், நரசிம்மரும், மகாலட்சுமியும் இணைந்து, சாந்த சொரூபமான லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தனர். அவ்வாறு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் மகாவிஷ்ணு, காட்சி கொடுத்த புனித நேரமே ‘விஷ்ணுபதி புண்ணிய காலம்’ என்றும் சான்றோர்கள் எடுத்துரைக்கின்றனர்.

இந்த புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் பெருமாள் ஆலயத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம். ஒரு தடவை விஷ்ணுபதி புண்ணிய கால விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், பல ஏகாதசி விரதங்களை கடைப்பிடித்த பலனை பெறுகிறார்கள் என சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த விரதத்தை கடைப் பிடித்து, வாழ்க்கைக்குத் தேவையானவற்றை பெற்று வளமான வாழ்வை அடைவதுடன், மோட்சத்தையும் பெறலாம்.

அன்றைய தினம் பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் கொடி மரத்தை வணங்கி, 27 தடவை பிரகாரத்தை வலம் வர வேண்டும். எண்ணிக்கைக்காக கைகளில் 27 பூக்களை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடி மரத்திற்கு முன் வைக்கலாம்.

வலம் வந்த பின்னர் மீண்டும் கொடி மரத்தை வணங்கி விட்டு, கோவிலில் அருள்பாலிக்கும் தாயார் மற்றும் பெருமாளை தரிசனம் செய்து வேண்டுதல்களை சமர்ப்பிக்கலாம். இறை சக்தியால் அடுத்து வரக்கூடிய மூன்று விஷ்ணுபதி புண்ணிய காலம் பூர்த்தி அடைவதற்குள்ளாக பக்தர்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

முன்னோர்கள் சாபம் உள்ள பல குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது. எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவுகள் நிம்மதியே இருக்காது. ஒரு சிலருக்கு குடும்பத்துடன் ஆரோக்கியப் பாதிப்புகள் வந்து கொண்டேயிருக்கும்.

யார் கொடுத்த சாபமோ இப்படி வாழ்க்கை இருக்கின்றதே என்று நம்மில் பலரும் புலம்புவதைக் கேட்டிருப்போம். இதை நிவர்த்தி செய்ய தாடிக்கொம்பு பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் பித்ருக்கள் சாப விமோசன விஷ்ணுபதி புண்ணிய கால பூஜையில் பங்கேற்பது நலம்.
Tags:    

Similar News