ஆன்மிகம்
முருகன்

வைகாசி மாத விரதத்தின் சிறப்புகள்

Published On 2020-05-22 08:59 GMT   |   Update On 2020-05-22 08:59 GMT
உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு.
உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதாரம் செய்தது வைகாசி மாத அனுஷ நட்சத்திர நாளில்தான். நாயன்மார்களுள் கழற்சிங்கர், சோமாசி மாறர், திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர், முருகநாயனார், நமிநந்தியடிகள் ஆகியோர் அவதரித்ததும் வைகாசி மாதத்தில்தான். பெரிய புராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகளும் வைணவப் பெரியாரான நம்மாழ்வாரும் அவதரித்தது இந்த மாதத்தில் தான்.

திருத்தணியில் பல தீர்த்தங்கள் உள்ளன. இதில் குமார தீர்த்தமும் ஒன்று. இதில் வைகாசி விசாகத்தன்று நீராடி முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை  எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும்.

இலங்கையின் கதிர்காமம், நல்லூர் கந்தசாமி கோயில், மாவிட்டபுர கந்தசாமி கோயில், வில்லூன்றி கந்தசாமி கோயில் கொழும்பு சுப்ரமண்யர் கோயில். மேலைப்பூ வேலி பூச்சந்தி கோயில்கள் இலங்கையின் அறுபடை வீடுகள். இலங்கை கதிர்காமத்தில் செப்பு ஓடாமல் வேயப்பட்ட கொட்டகைதான் முருகனின் கோயில். முன் வாசலில் குதிரைகள் உள்ளன. 7-வது திரையில் முருகன் மயில் மீது இரு தேவியருடன் அமர்ந்த ஓவியம் உள்ளது. திரைக்குப் பின் பெட்டியில் சடாட்சர மந்திரம்  யந்திர வடிவில் உள்ளது. இங்கு பூஜை அபிஷேகம் யாவும் மரகத்வேலுக்குத்தான் இங்கு நடைபெறும் வைகாசி விசாக விழாவில் ஆறுமுகப் புறப்பாடு மிகப்பிரபலம்.

ஆதிசங்கரர் அருளிய பிரசாதம் : கேரளாவில் உள்ள கொல்லூர் முகாம்பிகை கோயிலில், இரவு பூஜையின்போது அம்பிகைக்கு சுக்கு கஷாயம் நிவேதனம் செய்வர். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் இந்த விசேஷ பிரசாதம் வழங்கும் முறையை ஆதிசங்கரரே ஆரம்பித்து வைத்ததாக வரலாறு கூறுகிறது. அம்பிக்கைக்கு சமர்ப்பித்த சுக்கு கஷாயம் பிறகு, பக்தர்களுக்கு வழங்குவர்.

வைகாசியில் அனுமன் ஜெயந்தி: தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், வடநாட்டில் வைசாக (வைகாசி) பவுர்ணமிக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. லக்னோவுக்கு அருகில் ஆலிகஞ்ச் என்ற இடத்தில் அருள்புரியும் அனுமனை வைகாசி பவுர்ணமி அன்று விசேஷமாக வழிபடுகிறார்கள். அன்று லக்னோ நகரிலிருந்து ஆலிகஞ்ச் திருத்தலத்தில் உள்ள அனுமன் கோயில்வரை ஆண்கள் கோவணம் மட்டும் அணிந்து சாஷ்டாங்கமாக வணங்கியபடி சென்று வழிபடுகிறார்கள். முதலில் சாஷ்டாங்கமாக கைகளை நீட்டி நமஸ்காரம் செய்யும்போது, கைவிரல்கள் மூடிய இடத்தில் ஒரு கல்லை அடையாளமாக வைத்து, பிறகு, எடுத்து நின்று அந்தக் கல் வைத்த இடத்திலிருந்து அடுத்து (படுத்தபடி) நமஸ்காரம் செய்வார்கள். இப்படியே தொடர்ந்து நமஸ்காரம் செய்து கோயிலை அடைவார்கள். இதற்கு சயன தபஸ் என்று  பெயர்.

Tags:    

Similar News