ஆன்மிகம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள்

திருமண யோகம் கிடைக்க ரதி-மன்மதனுக்கு விரதம் இருந்து பூஜை செய்யுங்க

Published On 2020-05-08 09:19 GMT   |   Update On 2020-05-08 09:19 GMT
ரதி மன்மதன் கைகளில் 5 விதமான மலர் கணைகள் உள்ளதால், தொடர்ந்து 5 வியாழக்கிழமை விரதம் இருந்து பூஜையில் முழு சிரத்தையோடு பங்கேற்றால் காரிய சித்தியாகும் என்பது நம்பிக்கை.
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் முதலில் காட்சி தருவது சுமார் 30 ஆடி உயரத்திலான கொடி மரம்! அதனை தரிசித்து, கோயில் நுழைவு வாயிலின் வலதுபுறத்தில் அமைந்திருக்கும் பெருமாளின் படைத்தளபதியான விஷ்வக் சேனரை வழிபட வேண்டும். மூலவரான சுவாமிக்கு அமைக்கப்பட்டுள்ளது போல் அர்த்த மண்டபம், மஹா மண்டபத்துடன் கூடிய தனி விமானம் விஷ்வக் சேனருக்கும் உள்ளது. அருகிலேயே தல விருட்சமான வில்வ மரம் அமைந்துள்ளது.

கோவிலின் இடதுபுறத்தில் நம்மாழ்வார் சந்நிதியும், ஆனந்த விநாயகர் என்ற நாமத்துடன் இரட்டை விநாயகர் சந்நிதியும் அமைந்துள்ளன. இரட்டை விநாயகர், தாடிக்கொம்பு கோயிலுக்கு தனிச் சிறப்பு சேர்க்கிறார்.

கோவிலின் தசாவதார மண்டபத்தில் கலியுகத்தில் பெருமாள் எடுக்கப்போகும் கல்கி அவதாரத்தையும் சேர்த்து 10 அவதார காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. லட்சுமி நரசிம்மர், சந்தான வேணுகோபால சுவாமி ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். ஹயக்ரீவர், சரஸ்வதி, ஸ்ரீராம, லட்சுமணரின் திருமேனிகள் பாங்குற அமைக்கப்பட்டுள்ளன.

திருவோணம் நட்சத்திரத்தன்று ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கல்வி கடவுளாகவும், ஞாபக சக்தி அளிப்பவராகவும் போற்றப்படும் ஹயக்ரீவருக்கு விரதம் இருந்து தேன் அபிஷேகம் செய்தும், ஏலக்காய் மாலை சாத்துப்படி செய்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

மூலவருக்கு நேர் பின்புறத்தில் சர்வ நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்கு, அனைத்து விதமான நோய்களும் நீங்கி ஆரோக்கியமாக வாழ, அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. உள்நோய்களை நீக்குவதற்கு சுக்கு, மிளகு, திப்பிலி, கருப்பட்டி, தேன், நெய் கலந்த லேகியமும், சந்தனாதி தைலமும் தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப் பெற்று வெளிநோய்களுக்கு மருந்தாக வழங்கப்படுகிறது.

மூலவருக்கு பின்புறத்தில் வடமேற்கு திசையில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார் சூடி கொடுத்த சுடர் கொடியாளான ஆண்டாள். திருமணத் தடை நீங்கி, மாங்கல்ய பாக்கியம் கிடைப்பதற்கு பிரதி வியாழக் கிழமைதோறும் ரதி மன்மதன் சிறப்பு பூஜை ஆண்டாள் சந்நிதியில் நடத்தப்படுகிறது. ரதி மன்மதன் கைகளில் 5 விதமான மலர் கணைகள் உள்ளதால், தொடர்ந்து 5 வியாழக்கிழமை விரதம் இருந்து பூஜையில் முழு சிரத்தையோடு பங்கேற்றால் காரிய சித்தியாகும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு கல்யாண சவுந்தரவல்லித் தாயார் சமேத சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் தாயாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தில் தாயாருக்கும், அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று ஒருநாள் மட்டுமே தாயாரையும், பெருமாளையும் ஒருசேர பிரார்த்திக்க முடியும். இதுதவிர, ஆடி மற்றும் தை வெள்ளிக் கிழமைகளில் தாயாருடன் சேர்ந்து பெருமாளின் ஊஞ்சல் சேவையை தரிசிக்கலாம்.

நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதுரை அருள்மிகு கள்ளழகர் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து வைபவங்களும் இத் தலத்தில் நடைபெறுகிறது. கள்ளழகருக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக் கடனை சவுந்தரராஜப் பெருமாளுக்கு வழங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

வெளி பிரகாரத்தின் வடகிழக்கில் சொர்ண ஆகர்ஷண பைரவர் காட்சி அளிக்கிறார். சிவன் கோவில் களில் மட்டுமே காணப்படும் பைரவர் சந்நிதி, தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியின் போதும், பைரவருக்கு 6 கால சிறப்பு வழிபாடு நடைபெறும்.

திண்டுக்கல் நகரிலிருந்து சுமார் 15 கி.மீட்டர் தொலைவில் சேலம் செல்லும் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ளது தாடிக்கொம்பு. திண்டுக்கல் நகரிலிருந்து தாடிக்கொம்பு செல்வதற்கு தொடர்ச்சியான பேருந்து வசதி உள்ளது. பஸ் நிறுத்தத்திலிருந்து, கிழக்கு நோக்கி சிறிது தூரம் நடந்தாலே, அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாள் கோயிலைக் காணலாம்.
Tags:    

Similar News