ஆன்மிகம்
சித்ரகுப்தன்

விரதம் இருந்து சித்ரகுப்தரை வணங்கினால் சிறப்பான வாழ்வமையும்

Published On 2020-05-07 05:28 GMT   |   Update On 2020-05-07 05:28 GMT
சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை ‘சித்ரா பவுர்ணமி’ என்பார்கள். தாயை இழந்தவர்கள் இந்த தினத்தில் விரதமிருந்து, தான - தருமம் செய்வது சிறப்புக்குரியது.
திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள், பவுர்ணமியும் ஒன்று. இந்து சமயத்தவரால் பவுர்ணமி திதியானது, சிறந்த தினமாகப் பார்க்கப்படுகிறது. அம்பிகை வழிபாடு, பவுர்ணமி தினங்களில்தான் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை ‘சித்ரா பவுர்ணமி’ என்பார்கள். தாயை இழந்தவர்கள் இந்த தினத்தில் விரதமிருந்து, தான - தருமம் செய்வது சிறப்புக்குரியது.

மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து எமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்ரகுப்தர் அவதரித்த தினம் சித்ரா பவுர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள், சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தனை வழிபடுவதால் நீங்கும் என்பது நம்பிக்கை.

உலக உயிர்கள் அனைத்தின் பாவ- புண்ணியங்களை கணக்கெடுப்பது, பின்னர் அதற்கு ஏற்றாற்போல் நீதியை வழங்குவது போன்ற பணியை எமதர்மன் செய்து வருகிறார். இரண்டு பணிகளையும் அவர் ஒருவரே செய்து வந்ததால், துரிதமாக செயல்பட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். ஒருமுறை சிவபெருமானை சந்தித்து, தனக்கு ஒரு உதவியாளரை நியமிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். ஈசனும், ‘உரிய நேரம் வரும்போது, உதவியாளன் வந்துசேர்வான்’ என்று அருளினார்.

இந்த நிலையில் ஒரு முறை கயிலையில் சிவபெருமான் ஒரு சித்திரம் வரைந்தார். அதைக் கண்ட பார்வதி தேவி, அதன் அழகால் ஈர்க்கப்பட்டு, அந்த சித்திரத்திற்கு உருவமும், ஒலியும் கொடுத்தார். சித்திரத்தில் இருந்து வந்ததால், ‘சித்திர புத்திரன்’ என்று பெயர் பெற்றார். அதுவே நாளடைவில் ‘சித்ரகுப்தன்’ என்றானது.

சில காலம் கயிலையில் இருந்த சித்ரகுப்தன், எமதர்மனிடம் சென்று சேரும் நேரம் வந்தது. இந்திரன் தனக்கு பிள்ளை வரம் வேண்டும் என்று, தன் மனைவி இந்திராணியுடன் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து வந்தான். இந்திரன் தவம் செய்த இடத்தில் இருந்த காமதேனுவின் வயிற்றில் சித்ரகுப்தனை உதிக்கச் செய்த இறைவன், அவனை இந்திரனுக்கு புத்திரனாகும்படி செய்தார். காமதேனுவின் வயிற்றில் இருந்து உதிக்கும்போதே, கையில் சுவடியும், எழுத்தாணியும் பிடித்தபடி உதித்தவர் சித்ரகுப்தர். இதனால் பின்னாளில் அவர் எமனுக்கு உதவியாளரான, உலக உயிர்களின் பாவ- புண்ணியங்களை கணக்கிடுபவராக மாறினார்.
Tags:    

Similar News