ஆன்மிகம்
முருகன்

கல்யாணத்தைக் கைகூட வைக்கும் விரதம்

Published On 2020-04-10 04:53 GMT   |   Update On 2020-04-10 04:53 GMT
ஆறு முகமும், பன்னிரண்டு கரங்களும் இருப்பதால், தன்னை விரதம் இருந்து வணங்கும் பக்தர்களுக்கு கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக விளங்குகின்றார், முருகப்பெருமான்.
தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள் பங்குனி உத்திர திருநாளாகும். தெய்வத் திருமணங்கள் நடந்த பங்குனி உத்திரத் திருநாளில் நாமும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால் நமது வாழ்விலும் மறு மலர்ச்சி ஏற்படும். மணக்கோலம் காண வழிபிறக்கும்.

ஆறு முகமும், பன்னிரண்டு கரங்களும் இருப்பதால், தன்னை வணங்கும் பக்தர்களுக்கு கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக விளங்குகின்றார், முருகப்பெருமான். சிவனின் மைந்தன் செந்தில் வடிவேலனுக்கு உத்திரப் பெருவிழா கொண்டாடும் மாதம், பங்குனி மாதம் ஆகும். எத்தனை உத்திர நட்சத்திரங்கள் வந்தாலும் பங்குனி மாதம் வரும் பொழுது அது ‘பங்குனி உத்திரம்’ என்று சிறப்பாக அழைக்கப் படுகிறது. மாதங்களில் கடைசி மாதம் பங்குனியாக இருந்தாலும் நம்மை முதன்மையான மனிதராக மாற்றுவதற்கும், முக்கியமாக இல்லறம் என்னும் நல்லறத்தை ஏற்பதற்கும் இந்தப் பங்குனித் திருநாளில் விரதமிருந்து வள்ளி மணாளனை வழிபட வேண்டும்.

இத்தகைய சிறப்புமிக்க திருநாள் 6.4.2020 (திங்கட்கிழமை) அன்று வருகிறது. அன்றைய தினம் வீட்டு பூஜையறையில் வள்ளி - தெய்வானை உடனிருக்கும் முருகப்பெருமானின் படத்தை வைத்து பஞ்சமுக விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்

மருகனே, ஈசன் மகனே ஒரு கை முகன்

தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியேகை தொழுவேன் நான்!

என்று முன்னோர்கள் பாடியதைப்போல நாமும் நம்பிக்கையோடு பாடி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

பங்குனி உத்திரத் திருநாளில் முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல ராமர் - சீதை திரு மணம் நடைபெற்றதும், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திரு மணம் நடைபெற்றதும், ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்ததும் இந்த நாளில்தான் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

தெய்வங்களுக்குத் திருமணம் நடைபெற்ற இந்த நாளில் மனிதர்களாகிய நாம் விரதமிருந்து, மால்மருகனை வழிபட்டால் மணமாலை சூடுகின்ற மங்கல நாளைக் காண இயலும். எனவே இந்த விரதத்தை ‘கல்யாண விரதம்’ என்று வர்ணிப்பார்கள்.

வீட்டைத் தாங்குவது உத்திரம். அதைப்போல் நம் முடைய வாழ்க்கையைத் தாங்கிப் பிடிப்பது உத்திரம் நட்சத்திரம். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் சிலர் தவிப்பார்கள். ஜாதகத்தில் அங்காரக தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷங்கள் அமைந்தவர் களுக்கு எல்லாம் வரன்கள் வாசல் தேடிவந்து திரும்பிச் செல்லும் சூழ்நிலை அமையும். வரன்கள் வாசல் தேடி வர, பங்குனி உத்திர திருநாளில் முழுமையாக விரதம் இருந்து, கந்தப்பெருமானை சொந்தப் பெருமானாக நினைத்து வழிபட்டால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

முழுநாளும் விரதம் இருந்து ‘வேலை வணங்குவதே வேலை’ எனக்கொண்டால் நாளும், பொழுதும் நலமாக இருக்கும். வாழ்க்கை வளமாக இருக்க எதையேனும் ஒன்றை நாம் நம்புகிறோம். அந்த நம்பிக்கையை சிவன் மீது மாசி சிவ ராத்திரியன்று பரிபூரணமாக வைக்கிறோம். தந்தை மீது நம்பிக்கை வைத்த நாம், பங்குனி மாதம் தனயன் முருகன் மீதும் நம்பிக்கை வைக்கவேண்டும். குத்துவிளக்கின் கீழே இடும் கோலம் வெறும் கோலமாக இல்லாமல், நடுவீட்டுக் கோலம் என்று அழைக்கப்படும் முக்கோண, அறுகோண, சதுரங்கள் அமைந்த கோலங்களாக இடவேண்டும். கோலத்தில் புள்ளி அதிகமிருந்தால் தான் ‘புள்ளி’ எனப்படும் வாரிசு பெருகும் என்பார்கள்.

வழிபாட்டின் பொழுது மாங்கனி கிடைத்தால் மாங்கனி வைக்கலாம். இல்லையேல் தேன்கதலியோடு தேனும், தினை மாவும் நைவேத்தியமாக வைத்து நாமே அதைச் சாப்பிடலாம். அருகில் இருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. அன்றைய தினம் சண்முகருக்கு சர்க்கரை அபிஷேகம் செய்தால், அவன் அக்கறையோடு நமக்கு அருள் தருவான். பஞ்சாமிர்தத்தால் அந்தப் பாலகனுக்கு அபிஷேகம் செய்தால் அஞ்சாத வாழ்வை அளிப்பான். பாலாலும், பன்னீராலும் அபிஷேகம் செய்து பார்த்தால் வாழ்நாளை நீடித்துக் கொடுப்பார். பங்குனி உத்திரத்தன்று ஆலயங்களுக்கு அருகில் தண்ணீர் பந்தல் வைத்து பக்தர்களுக்கெல்லாம் மோர் மற்றும் பானகம் கொடுத்தால் எண்ணிய பலன் நமக்குக் கைகூடும். அந்த அடிப்படையில் பார்போற்றும் வாழ்வமைய நாம் பரமசிவனின் மைந்தனை மனதில் நிறுத்தி வழிபடுவோம்.

காவிரியின் நீர் பெருகி கரை உடைந்து வந்துவிட்டால் கடைசியிலே சேரும் இடம் `கொள்ளிடம்'. கவலை யென்று வந்துவிட்டால் கைகூப்பித் தொழுதவருக்கு கவலை தீரும்; கந்தன் என்று சொல்லுமொரு சொல்லிடம். எனவே உத்திர நாளில் ‘கந்தா! கந்தா!’ என்று கனிவோடு கூறினால், ‘இந்தா! இந்தா!’ என்று வரங்களை நமக்கு வடிவேலன் தருவார்.

-‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
Tags:    

Similar News