ஆன்மிகம்
முருகன்

பாவ விமோசனம், குழந்தை பாக்கியம் அருளும் மாசி மகம் விரதம்

Published On 2020-03-07 05:40 GMT   |   Update On 2020-03-07 05:40 GMT
மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும். அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
மாசி 25-ந்தேதி, மார்ச் 8-ந்தேதி மாசி மகம் வருகிறது. அதற்கு அடுத்த நாளான 9-ந்தேதியே பவுர்ணமி வருகிறது.

சிறப்புகள்

மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார். மக நட்சத்திரத்தில் சிம்ம ராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்க ராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் கும்பகோணத்தில் மாசி மகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

வழிபாட்டுக்கு உகந்த மாசி மகம்


மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.

இந்நாள் முருகப் பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான். சிவன், விஷ்ணு,முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.

நீராடல்

தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும்.மாசி மாதத்தில் பவுர்ணமியையட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோயில்களில் இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபடுவர். மக நட்சத்திரத்தை “பித்ருதேவ நட்சத்திரம்“ என்று அழைப்பார்கள்.

உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியதையனது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான்.

ஆண் குழந்தை பெற

எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்ய வேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை “பிதுர் மகா ஸ்நானம் “ என்கிறது சாஸ்திரம். அன்றிரவு பவுர்ணமி வேளையில் விழித்திருந்து அம்மன் சன்னதிகளில் நடக்கும்,பூஜைகள் அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பது மிக்க நன்மை தரும். சதுரகிரி, திருவண்ணாமலை, திருநீர்மலை உள்ளிட்ட மலை சேத்திரங்களில் கிரிவலம் செய்வது சாலச் சிறந்தது. ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும். அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

வளமான வாழ்க்கை

மகத்திற்கு அழிவே இல்லை. அதுவும் மாசிமகம் இன்னும் சக்தி படைத்தது. அதனால் தாட்சாயினியாக அம்மன் மக நட்சத்திரத்தில் தோன்றிய பிறகுதான் சக்தி பீடங்கள் உருவாகி உலகநாயகியாக போற்றப்படுகிறார் அன்னை சக்திதேவி. மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணுபகவானையும் பித்ருக்களையும் வணங்கினால் சகலநலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும்

பொதுவாகவே பவுர்ணமி அன்று இருக்கும் விரதம் நமக்கு சிறப்பான பலன் தரும். மாசி மாத பவுர்ணமியன்று சத்யநாராயண பூஜை செய்வதும், மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில் களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகள் தரும். மாசி மாத பவுர்ணமி கிரிவலத்தின்போது வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்தால் உங்களின் பல மனிதப்பிறவிகளின் கர்மங்கள் உடனே தொலைந்ததாக அர்த்தம்.

பிறவா பேரருள் உங்களுக்கு வாய்க்கும். மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை திருத்தலத்தில் கிரிவலம் செல்லுவது அற்புத பலன்களை அள்ளித்தரும். கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிவோர்கள்,வழக்கறிஞர் ஆகியோர் அதிகப் பலன்களை அடைய முடியும். கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசிபவுர்ணமியன்று கிரிவலம் வருவதால்,கணவனின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.

கொடுத்த கடனை திருப்பிப் பெறமுடியாமல் நொடித்துபோனவர்கள் மாசிபவுர்ணமி கிரிவலத்தால், அதிலிருந்து மீளமுடியும். மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்லுவதால் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள்,மின் அணுத்துறையில் பணிபுரிவோர்கள்,நீதித் துறையில் இருப்பவர்கள் நியாயமான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

Tags:    

Similar News