ஆன்மிகம்
12 ராசி

மாசி மகம்: 12 ராசிகளும்.. விரத வழிபாட்டு பலன்களும்..

Published On 2020-03-03 06:02 GMT   |   Update On 2020-03-03 06:02 GMT
பன்னிரண்டு ராசியினரும் மாசி மக நாளில் விரதம் இருந்து செய்ய வேண்டிய தான, தருமங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
பன்னிரண்டு ராசியினரும் மாசி மக நாளில் விரதம் இருந்து செய்ய வேண்டிய தான, தருமங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மேஷ ராசியினர், விரதம் இருந்து முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, துவரம் பருப்பு சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் பணவரவு இரட்டிப்பாகும். அன்றைய தினம் தந்தை மற்றும் பெரியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி, அவர்களின் ஆசியைப் பெறுங்கள். முன்னோர் வழிபாடு செய்து இயன்ற அளவு அன்னதானம் செய்தால் தடை தாமதம் நீங்கும்.

ரிஷப ராசியினர், விரதம் இருந்து சிவபெருமானுக்கு வில்வ மாலையும், அம்பிகைக்கு ரோஜா மாலையும் அணிவித்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் மன சஞ்சலம் நீங்கும். ஆதரவற்றவர்களை பராமரிக்கும் இல்லங்களுக்கு உணவு- உடை தானம் தந்தால், காரியம் சித்தியாகும்.

மிதுன ராசியினர், விரதம் இருந்து மகா விஷ்ணுவிற்கு துளசி மாலை அணிவித்து, பாசிப்பருப்பு பாயசம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் நிரந்தர செல்வம் சேருவதுடன், சுப பலன்கள் உண்டாகும். படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வாங்கிதர மனக் கவலை அகலும்.

கடக ராசியினர், விரதம் இருந்து அசைவ உணவை தவிர்த்து அம்பிகைக்கு பால், தயிர் அபிஷேகம் செய்து வெண்பட்டு புடவை சாற்றி, பால் பாயசம் நைவேத்தியமாக படைத்தால் சகல வினைகளும் அகலும். விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், விவசாய தளவாட பொருட்கள் வாங்கி கொடுக்க, பாவங்கள் நீங்கி அதிர்ஷ்டம் வந்து சேரும்.

சிம்ம ராசியினர், விரதம் இருந்து அசைவ உணவை தவிர்த்து பார்வதி, பரமேஸ்வரருக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து, கோதுமை பாயசம் நைவேத்தியம் செய்யுங்கள். சிவாச்சாரியார்களுக்கு உணவு, உடை தானம் தந்து ஆசி பெற பணவரவு பன்மடங்காகும். விட்டுப்போன பித்ரு தர்ப்பணத்தை செய்தால், சுப காரிய தடை அகலும், கர்மவினை நீங்கும்.

கன்னி ராசியினர், விரதம் இருந்து மகா விஷ்ணுவிற்கு வஸ்திரம் சாற்றி வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் பாவங்கள் விலகி ஓடும். பள்ளி, கல்லூரி படிப்பை தொடர சிரமம் இருப்பவர்களுக்கு பண உதவி செய்யலாம்.

துலாம் ராசியினர், விரதம் இருந்து அம்பிகைக்கு பொட்டு தாலி அணிவித்து குங்கும அர்ச்சனை செய்வதோடு, கல்கண்டு சாதம் நைவேத்தியமாக படைப்பது நல்லது. அதை சுமங்கலி பெண்களுக்கு தந்தால் நற்பலன்கள் அதிகரிக்கும். அன்றைய தினம் வலம்புரி சங்கு வைத்து லட்சுமி குபேர பூஜை நடத்தினால், பண வரவு மகிழ்ச்சி தரும் விதத்தில் இருக்கும்.

விருச்சிக ராசியினர், விரதம் இருந்து சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும் போது, பல தலைமுறை சாபம் நீங்கி புண்ணிய பலன் அதி கரிக்கும். கஷ்டங்களில் இருக்கும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லருளை பெற்று தரும்.

தனுசு ராசியினர், விரதம் இருந்து குலதெய்வத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து சர்க்கரை பொங்கல் படையலிட்டு வழிபட்டால், பொருளாதாரத்தில் தன்னிறைவு கிடைக்கும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பராமரிப்பிற்கு உதவுங்கள். குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களுக்கு புத்தாடையுடன் இட்லியும், எள்ளு சட்னியும் தண்ணீருடன் தானம் தர முன்னோர் களின் நல் ஆசி கிட்டும்.

மகர ராசியினர், விரதம் இருந்து சிவன் கோவில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி தந்து, பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு திருப்பணி செய்ய உதவினால் கர்ம வினை நீங்கும். துப்புரவு தொழிலாளிகளுக்கு உணவு, ஆடை தானம் தர வேண்டும். ஆன்மாவும் உடலும் குளிர புனித நதிகளில் நீராட வேண்டும்.

கும்ப ராசியினர், விரதம் இருந்து கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் பொருட்கள் கலந்து இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தால் மோட்சத்திற்கு வழிபிறக்கும். சுத்த அன்னம் நைவேத்தியமாக படைத்து, அதை தானம் செய்ய பண கஷ்டம் நீங்கும். தொழில் விருத்தி உண்டாகும். சாலை ஓரங்களில் ஆதரவின்றி அல்லல்படுபவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவி செய்யுங்கள்.

மீன ராசியினர், விரதம் இருந்து சிவனின் திருமேனிக்கு சந்தனக்காப்பு பொருத்தி குளிர்வித்தால், உங்கள் மனதில் இருக்கும் மனக்கவலை குறையும். பசு மற்றும் மிருகங்களுக்கு உணவிடுங்கள். அன்றைய தினம் கோ பூஜை நடத்தினால் பணப் பற்றாக்குறை நீங்கும். சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று லட்டு தானம் தந்து வணங்கி வழிபட வினைப்பயன் நீங்கும்.
Tags:    

Similar News