ஆன்மிகம்
அமாவாசை வழிபாடு

எண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு

Published On 2020-01-20 08:06 GMT   |   Update On 2020-01-20 08:06 GMT
எத்தனை வழிபாடுகளை மேற்கொண்டாலும், குலதெய்வ வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டையும் நாம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
எத்தனை வழிபாடுகளை மேற்கொண்டாலும், குலதெய்வ வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டையும் நாம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதைத்தான் ‘அமாவாசை’ திதி என்கிறோம். அமாவாசை என்பது இருள்மயமான நாள். இதனை ‘நிறைந்த நாள்’ என்பார்கள். வாழ்வில் வளம் நிறைய அன்றைய தினம் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும்.

திதிகளிலேயே மிகவும் பிரசித்து பெற்றது, அமாவாசை திதி. மகத்துவம் நிறைந்த இந்த நாளை, ‘நீத்தார் நினைவு நாள்’ என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இந்த இனிய நாளில் நம் முன்னோர்கள் மற்றும் இறந்து போன தாய்-தந்தையரை நினைத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். இதனால் பிதுர் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

‘கருடபுராணம்’, ‘விஷ்ணு புராணம்’ போன்ற நூல்களில் அமாவாசையின் சிறப்பு பற்றி அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இறந்தவர்களை நினைத்து, ஒவ்வொரு அமாவாசையிலும் தவறாமல் வழிபடுவதால், அவர்களது பரிபூரண ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும். அதோடு நமது பாவ வினைகள் அகல்வதற்கான வழியும் பிறக்கும்.

பொதுவாக அமாவாசை அன்று அதிகாலையில் புண்ணிய நதிகள், கடல் போன்ற நீர்நிலைகளில் நீராடி திதி கொடுப்பார்கள். இஷ்ட தெய்வ ஆலயங்களுக்குச் சென்று இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பாகும். இறந்த முன்னோர்களின் படங்களுக்கு பூ மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை தலை வாழை இலையில் படைத்து வணங்குவார்கள். சில முக்கியமான ஸ்தலங்களில் திதி கொடுப்பது மிகவும் சிறப்பாகும்.

தமிழகத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தக்குளம், திருவரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு, கன்னியாகுமரி போன்ற தலங்கள் முக்கியமானவை. இவை நீங்கலாக வடநாட்டில் காரி, கயா, பத்ரிநாத், அலகாபாத், திருவேணிசங்கமம் போன்றவைகளும் பிரசித்தி பெற்றவை.

அமாவாசை வழிபாடுகளில் சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். அன்றைய தினம் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ‘பிதுர்காரகன்’ என்று கருதப்படும் சூரியனை வழிபட்டால் பிதுர்தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். கோதுமையில் செய்த உணவுகளை தானம் செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும். முன்னோர்கள் வழிபாட்டில் காகம் மிகவும் முக்கியமாகக் கருதப் படுகிறது. அமாவாசை விரதத்தை மேற்கொள்ளும் பொழுது முதலில் எல்லா உணவுகளையும் வைத்து காகத்தை அழைத்து அன்னமிட்டு அதன்பிறகு தான் விரதத்தை கைவிட வேண்டும். காகம் நம் முன்னோர் களின் வடிவில் வந்து உணவை எடுத்துச் செல்லும். வைத்த உடனேயே காகம் வந்து விட்டால் நமக்கு முன்னோர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்கும்.

பசுவிற்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும் அகத்திக்கீரை கொடுத்து வந்தால், நாம் திதி கொடுக்க மறந்திருந்தால் கூட அதற்கான பலன் கிடைக்க வாய்ப்புண்டு. திதி கொடுக்க மறந்தவர்கள், மகாளய அமாவாசை என்று கூறப்படும் புரட்டாசி மாதம் வருகிற அமாவாசையில் திதி கொடுக்கத் தொடங்கி, அதன்பிறகு தொடர்ந்து அமாவாசைகளில் திதி கொடுத்து வரலாம். முன்னோர்களைத் தான் நாம் முக்கியமாகக் கொண்டாட வேண்டும். அவர்கள்தான் நம் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருப்பார்கள்.

அமாவாசை அன்று புதிய முயற்சிகளை பலரும் மேற்கொள்கிறார்கள். ஆனால் ஜோதிட நூல்களில் அமாவாசை என்பது, ஆலய வழிபாட்டிற்கு உகந்தது. எனவே மற்ற முயற்சிகளை விட வழிபாட்டில்தான் ஆர்வம் செலுத்த வேண்டும். மேலும் இன்றைய தினம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் பலமடங்கு பலன் கிடைக்கும். கிராம தேவதைகள், காவல் தெய்வங்களை வழிபடுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அமாவாசை அன்று நம்மால் இயன்ற அளவு அன்னதானம், வஸ்திர தானம் செய்வது நல்லது.

நம் எண்ணங்கள் நிறைவேற முன்னோரை முறையாக வழிபடுவோம். முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்வோம்.

எஸ்.அலமு ஸ்ரீனிவாஸ்
Tags:    

Similar News