ஆன்மிகம்
லட்சுமி

மகாலட்சுமிக்கு உகந்த விரதங்களும்- அனுஷ்டிக்கும் முறையும்

Published On 2019-12-20 11:51 IST   |   Update On 2019-12-20 11:51:00 IST
மகாலட்சுமிக்கு விரதம் இருக்கும் நாட்களில் ஒரு வேளை பகலில் மித உணவு உண்டு, மாலையில் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் அஷ்ட லட்சுமிகளை வணங்கி, நிவேதனம் செய்த பால் பழம் உண்டு விரதம் முடிப்பது பழக்கம் ஆகும்.
ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமியும் லட்சுமி விரதத்திற்குரிய காலமாகும். ஆவணி வளர்பிறைப் பஞ்சமிக்கு ‘மகாலட்சுமி பஞ்சமி’ என்று பெயர். அன்று தொடங்கி அஷ்டமி வரை நான்கு நாட்கள் வழிபடுவது மகாலட்சுமி விரதம் ஆகும்.

கார்த்திகை மாதப் பஞ்சமியை ‘ஸ்ரீபஞ்சமி’ என்று அழைத்து அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர். அன்று அஷ்ட லட்சுமிகளுக்குப் பால் நிவேதனம் செய்து, வருபவர்களுக்கு வழங்கினால் தோஷங்கள் நீங்கும்.

ஐப்பசி மாதப் பவுர்ணமியில் மகாலட்சுமியை வழிபடச் செல்வம் பெருகும். ஐப்பசி அமாவாசையன்று (தீபாவளிக்கு அடுத்த நாள்) மகாலட்சுமி பூஜை செய்யப்பட வேண்டும். புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து மகாலட்சுமியை வழிபடுவது சோடச லட்சுமி விரதமாகும். இதனால் 16 செல்வங்களையும் நிறைவாக பெற்று வாழலாம்.

இந்நாட்களில் ஒரு வேளை பகலில் மித உணவு உண்டு, மாலையில் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் அஷ்ட லட்சுமிகளை வணங்கி, நிவேதனம் செய்த பால் பழம் உண்டு விரதம் முடிப்பது பழக்கம் ஆகும்.

சுக்ரவார விரதம்- வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை தியானித்து வழிபட செல்வ வளம் பெருகும்.

நவராத்திரி லட்சுமி விரதம்- சாரதா நவராத்திரியில் 4, 5, 6&ம் நாட்களில் லட்சுமிவரும் நாளாகக் கருதி விரதம் செய்யலாம்.

பைரவ லட்சுமி விரதம்- புளிப்புப் பண்டங்கள் சேர்க்காத படையல்களை வைத்து வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்து வரும் 8 வெள்ளிக்கிழமைகள் செய்து முடிக்க வேண்டும்.

Similar News