குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் “வியாழக்கிழமை விரதம்”. 3 ஆண்டுகள் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை வறிய நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.