ஆன்மிகம்
பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய போது எடுத்த படம்.

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

Published On 2019-11-18 02:57 GMT   |   Update On 2019-11-18 03:01 GMT
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வார்கள். இவ்வாறு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து விரதம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

கன்னியாகுமரியில் நேற்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முக்கடல் சங்கம கடற்கரையொட்டியுள்ள விநாயகர் கோவிலில் தரிசனம் செய்தனர். பின்னர், சாமி பாதத்தில் வைத்த துளசிமாலையை பூசாரி மூலம் பக்தர்கள் அணிந்து கொண்டனர். இதையொட்டி விநாயகர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதேபோல், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜாகோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில், பார்வதிபுரம் ஐயப்பன் கோவில் போன்ற கோவில்களில் பக்தர்கள் துளசிமாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

இவர்கள் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து, மண்டல பூஜைக்காகவும், மரகவிளக்கு தரிசனத்துக்காகவும் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள். இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கார்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

கன்னியாகுமரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இதனால், இந்த 3 மாத காலமும் ஐயப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்கள் சீசன் நேற்று தொடங்கியது. இந்த சீசன் காலம் ஜனவரி 20-ந்தேதி வரை நீடிக்கும். சீசனையொட்டி ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 24 மணிநேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News