ஆன்மிகம்

இன்று கஷ்டங்களை போக்கும் கால பைரவாஷ்டமி விரதம்

Published On 2018-11-30 01:26 GMT   |   Update On 2018-11-30 01:26 GMT
இன்று (30-ந்தேதி) வெள்ளிக்கிழமை கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இன்று விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் பறந்தோடும்.
இன்று (30-ந்தேதி) வெள்ளிக்கிழமை கால பைரவாஷ்டமி தினமாகும். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இதனை ருத்ராஷ்டமி, தேவாஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்வார்கள். இது தேவர்களே பைரவரை பூஜிக்கின்ற நாள்.

சிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.

ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும்.
அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள். வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்... மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் “பைரவா... காப்பாற்று’’ என்று அழைத்துப் பாருங்கள், காகம் விரட்டும் போது கோழி தன் குஞ்சுகளை எப்படி தன் இறக்கைக்குள் வைத்து காப்பாற்றுகிறதோ, அப்படி ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவார்.

பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால். நவக்கிரக தோஷங்கள் விலகி, தீவினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை குனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள். 8 மற்றும் 64 என்ற எண்ணிக்கையில் பல கோலங்களில் பைரவர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பைரவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது மிக, மிக பிடிக்கும்.

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, சந்தன மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், தேன், அவல் பாயசம் மற்றும் பழ வகைகளை படைத்து பைரவரை வழிபட்டால் நாம் விரும்பியதை எல்லாம் பைரவர் தருவார். தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.

செல்வத்தை நமக்கு வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு தங்களது செல்வ வள சக்தியை மேம்படுத்தி கொள்கிறார்கள். எனவே நாமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் மங்காத செல்வ வளத்தை பெறலாம் என்பது ஐதீகமாகும்.

தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.

படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில் களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

தேய்பிறை அஷ்டமி தினத்தன்று செய்யப்படும் பைரவர் வழிபாடு மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும். தைமாதம் முதல் துவங்கி ஒவ்வொரு செவ்வாய், சனிக்கிழமையும் பைரவரை வணங்கி பஞ்சதீபம் ஏற்றி, காலபைரவ அஷ்டகம் படித்து பூஜை செய்து வந்தால், எதிரிகள் அழிந்து கடன்கள் தீர்ந்து யம பயம் மட்டுமல்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.

செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரும் பரணி, ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திரம் இணைந்த நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News