ஆன்மிகம்

ராதாஷ்டமி விரதம்

Published On 2018-10-13 04:51 GMT   |   Update On 2018-10-13 04:51 GMT
பரமாத்மாவான இறைவனுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மரூபிணி ராதா. அதனாலேயே அவள் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு ‘ராதா’ கிருஷ்ணன் ஆனார், அந்தப் பரந்தாமன்.
இறைவனை வழிபடும் பக்தனின் பல பாவங்களில் ஒன்றான ‘காதல்’ பாவத்தில் கிருஷ்ணனை நேசித்து அவனுடன் ஓருயிராக இணைந்து, ராசலீலைகளில் மகிழ்ந்து, அணுவளவும் அவனை விட்டுப் பிரிய மனமின்றி வாழ்ந்த ராதாவின் பக்தி அளவிடற்கரியது. அவளே கண்ணனின் மனதைக் கொள்ளை கொண்டவள்.

பரமாத்மாவான இறைவனுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மரூபிணி ராதா. அதனாலேயே அவள் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு ‘ராதா’ கிருஷ்ணன் ஆனார், அந்தப் பரந்தாமன். கண்ணனைப் போலவே ராதா பிறந்ததும் அஷ்டமியில்தான். இந்த நன்னாள் உத்தரப் பிரதேசத்திலுள்ள ராதா பிறந்த ‘பர்சானா’ என்ற ஊரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கோகுலத்தில் யாதவ குல அரசன் வருஷபானு ஒருநாள் யமுனை நதிக்கரையில் அழகிய தாமரை மலரில் ஒரு பெண் குழந்தையைக் கண்டார். ஆர்வத்துடன் அதனை அள்ளி எடுத்து, இல்லம் சென்று தன் மனைவி கீர்த்திதாவிடம் கொடுத்தார். ஆனால் அக்குழந்தையின் கண்கள் பார்க்கும் தன்மையற்று இருந்ததை அறிந்த தம்பதியர் மன வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

தன் தோழியின் குழந்தையைக் காண நந்தகோபனுடனும், கண்ணனுடனும் வந்த யசோதா குழந்தைக்கு கண்பார்வை இல்லாததை அறிந்தாள். அச்சமயம் அன்னையின் கையிலிருந்து துள்ளி எட்டிப் பார்த்த கண்ணனைக் கண்டதும் ராதாவின் கண்கள் பளிச்சென்று திறந்து கொண்டதாம்.

கண்ணன் பிறப்பதற்கு முன்பே பிறந்த ராதா, கண்களைத் திறந்தது கண்ணனைப் பார்த்த பின்புதானாம். கோபியர் அனைவருக்குமே கண்ணன் இனியவன் என்றாலும் ராதாவின் அன்பு மட்டுமே கண்ணனைக் கட்டிப்போட்டது.

கண்ணனும் பெரும்பாலான நேரம் ராதாவுடன் இருப்பதிலேயே மகிழ்ந்தார். உடல் கண்ணன் என்றால் அவனது உயிர் ராதா. பரமாத்மா கண்ணன். ஜீவாத்மா ராதா. பரமாத்மாவும், ஜீவாத்மாவும் இணைவதைக் குறிப்பதே ராதா கிருஷ்ண பிரேமை.

கண்ணனை விட்டுப் பிரியாமல் கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் ஆடிப் பாடி கூடி மகிழ்ந்த ராதா, கண்ணன் மதுராவுக்குச் சென்ற பின்பு அவனையே நினைத்து அழுதாளாம். தன் கரங்களில் முகத்தைப் புதைத்து கண்ணீர் சிந்திக்கொண்டே இருந்து, சற்றும் உறங்காமல் இருந்தாள் என்று உத்தவர் ‘பிரஹ்லாத சமிதை’யில் கூறுகிறார். 
Tags:    

Similar News