ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் காமிகா ஏகாதசி விரதம்

Published On 2017-08-18 08:06 GMT   |   Update On 2017-08-18 08:06 GMT
ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு உகந்த காமிகா ஏகாதசி விரதமான இன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது பிரம்மஹத்தி தோஷம் போக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
இன்று ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு உகந்த காமிகா ஏகாதசி விரதம் அனுஷடிக்கப்படுகிறது. இன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது பிரம்மஹத்தி தோஷம் போக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி எனப்படும். இந்த நாளில் துளசியால் பெருமாளை பூஜை செய்வதால் ஸ்வர்ணத்தைத் தானம் செய்த பலன் கிடைக்கும். இந்த ஏகாதசி அன்று நெய் தீபம் ஏற்றுவது, தீப தானம் செய்வது ஆகியவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கும். இது கொடிய பாபங்களில் இருந்து விடுதலை வாங்கித் தரும் ஏகாதசி.

இதன் மகிமையை நாரதருக்கு பிரம்ம வைவர்த்த புராணத்தில் பிரம்மா எடுத்து சொல்லும் போது, காமிகா ஏகாதசி விரதம் ஒரு பிராமணனை கொன்ற பாபத்திலிருந்து கூட விடுவிக்கும் எனக் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு இந்த ஏகாதசியின் மகிமை பற்றி எடுத்து சொல்லும் போதும் இதையே கூறுகிறார். காமிகா ஏகாதசிக்கு ஸ்ராவண கிருஷ்ண ஏகாதசி எனவும் பெயருண்டு.

காமிகா ஏகாதசியை பற்றிய கதை :

ஒரு காலத்தில் ஒரு பண்ணையார் பிராமணர் ஒருவரை சண்டையின் போது தவறுதலாக கொன்று விடுகிறார். தனது தவறை உணர்ந்து அதற்கு பிராயச்சித்தமாக அந்த பிராமணரின் இறுதி சடங்கின் செலவை ஏற்றுக்கொள்ள நினைத்தார்.வெகுண்ட ஊர் மக்கள் அவரை விரட்டினர். மனது வருத்தமடைந்த பண்ணையார் ஒரு சன்யாசியை அணுகி தனது வருத்தத்தை தெரிவித்தார்.

அவரும் காமிகா ஏகாதசி விரதத்தை பற்றி கூறி அது எந்தவிதமான பாபத்தையும் நீக்கும் எனக் கூறினார். பண்ணையாரும் அதே மாதிரி விரதமிருந்து விஷ்ணுவின் சிலையருகேயே தூங்கினார். அந்த இரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய ஸ்ரீ ஹரி அவரின் பிரம்மஹத்தி பாபம் தொலைந்தது எனக் கூறினார். பண்ணையார் காமிகா ஏகாதசி விரதமிருந்ததே காரணம் எனவும் உரைத்தார்.

காமிகா ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்குவதால் உண்டாகும் பலன் :

காமிகா ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது. இன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் ஒருவரின் மூதாதையர்கள் சுவர்க்கத்திற்கு முன்னேறுவார்கள். காமிகா ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாபங்களில் இருந்து விடுபடுவார்கள்.

காமிகா ஏகாதசி விரதமிருப்போரை தேவர்களும்,கந்தர்வர்களும், பன்னகர்களும்,நாகர்களும் போற்றுவார்கள். இன்று விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி அனைத்து நற்பலனும் கிடைப்பதோடு புத்திர தோஷமும் நீங்கும்.
Tags:    

Similar News