ஆன்மிகம்

கேது தோஷம் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்

Published On 2017-08-11 04:11 GMT   |   Update On 2017-08-11 04:12 GMT
சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர் சதுர்த்தியிலும் பிள்ளையாரை வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.
விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியை மஹா சங்கடஹர சதுர்த்தியாக அனைத்து விநாயகர் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும். ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக மிக முக்கியமானது.

ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிப்பது சிறந்த நற்பலன்களை தரும்.

ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.

தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர் சதுர்த்தியிலும் பிள்ளையாரை வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.

விநாயகரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் தடைகள் நீங்கி கல்வியில் ஏற்றமும், ஞானமும், புலமையும் ஏற்படும். அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். வன்னி மரத்தடி விநாயகர், கிரஹ தோஷங்கள் விலக்குவார். ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூன்யங்கள் அகலும்.

Tags:    

Similar News