ஆன்மிகம்

ராகு கால பூஜையை விரதமிருந்து வீட்டில் செய்யும் முறை

Published On 2017-07-20 08:59 GMT   |   Update On 2017-07-20 08:59 GMT
ராகுகால துர்க்கை பூஜையை கோவிலில் முடியாத நேரத்தில் அவரவர் வீட்டிலும் செய்யலாம். ராகுகால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும்.
ராகுகால துர்க்கை பூஜையை இயன்றவரை கோவிலில் செய்வதே நல்லது. முடியாத நேரத்தில் அவரவர் வீட்டிலும் செய்யலாம். ராகுகால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் அருந்தலாம்.

வீட்டு பூஜை அறையை மெழுகி கோலமிட வேண்டும். சுத்தமான மணைப் பலகை ஒன்றின் மீது நுனி வாழை இலையை வைத்து (நுனி வடக்கு பார்த்து இருப்பது நல்லது), அதன் நடுவே சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மையத்தில் சிறிது துவரம் பருப்பைப் பரப்புங்கள். இந்த அமைப்பின் நடுவே குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கை வைத்து, அதனை துர்க்கையாக பாவித்து, பொட்டு வைத்து, பூ போட்டு பின்னர் விளக்கேற்ற வேண்டும். அதன் முன் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விட்டு, மூடியில் திரி போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.

செவ்வரளி மற்றும் மஞ்சள் நிறப் பூக்களைப் பயன்படுத்துங்கள். தெரிந்த துர்க்கை துதிகளைச் சொல்லுங்கள். துர்க்கை போற்றியினை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். தூப, தீபம் காட்சி வணங்க வேண்டும். தயிர் சாதம், பால் பாயாசம் என உங்களால் இயன்ற நிவேதனங்களோடு, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறினை சேர்த்து பானம் தயாரித்து அதையும் நைவேத்தியம் செய்யுங்கள். பூஜை முடிந்த பின்னர் யாரேனும் பெண்மணிக்கு பிரசாதங்களோடு இயன்ற மங்கள பொருட்களைக் கொடுத்து, நீங்களும் பிரசாதம் சாப்பிடுங்கள். ராகுகாலம் முடிந்த பின்னர், பூஜித்த விளக்கு அமைப்பினை சற்று வடக்காக நகர்த்தி வைத்து பூஜையை நிறைவு செய்யுங்கள்.
Tags:    

Similar News