ஆன்மிகம்

ரமலான் நோன்பின் மகத்துவம்

Published On 2017-06-24 06:10 GMT   |   Update On 2017-06-24 06:10 GMT
கோபத்தை கட்டுப்படுத்தி, சுய கட்டுப்பாட்டை வளர்ப்பதோடு அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுத்துவதோடு, நல்வழி பாதை நோக்கி தன் பயணத்தை செலுத்தவும் நோன்பு உதவுகிறது.
ரமலான் நோன்பு உங்களுக்கு கேடயமாக உள்ளது என இஸ்லாம் கூறுகிறது. தீமைகளை நோக்கி செல்லாமல் நல்வழியை நடத்துவதால் நோன்பை கேடயம் என்கிறது. மனிதனின் நல்லொழுக்கம், பண்புகள், தருமம், ஆன்மிக ஈர்ப்பு இவை மட்டுமே நோன்பின் முக்கிய நோக்கம். தன் உடலை வருத்திக் கொண்டு மேற்கொள்ளும் நோன்பே இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் நோன்பு கடைப்பிடிக்கும் போது பசி, தாகம் போன்ற உடல் ரீதியான சிரமங்கள் ஏற்படும். அந்த சிரமத்தை தவிர்த்து நோன்பு வைக்கும் நற்குணம் இறைவனுக்கு மிகவும் பிடித்து விடுகிறது.

நோன்பு காலங்களில் ஐந்து வேளை தொழுதல், குர் ஆன் படிப்பது, தர்மங்கள் அதிகம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பொய் பேசுதல், தவறு செய்தல், புறம் பேசுவது, ஏமாற்றுவது என அனைத்து வகை குற்றங்களில் இருந்து நோன்பு இருப்பவர் இம்மாதத்தில் தடுத்து கொள்கிறார்.

நோன்பு என்னும் ஓர் கேடயம் அவரை நல்வழிக்கு அழைத்து செல்கிறது. இந்த ஒரு மாத நோன்பு கால செயல்பாடுகள் அடுத்து வரும் மாதங்களிலும் தொடர்ந்து வருதல் வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். அதற்காகவே ‘ரமலான் மாதத்தில் உடலையும், மனதையும் நல்வழி நோக்கி செல்லுமாறு பக்குவப்படுத்துகிறான்.



நோன்பு இருப்பது என்பது பட்டினி கிடப்பது அல்ல. உண்ண உணவும், வாய்ப்பும் இருந்தபோதும் அதனை உண்ணாத ஏழையின் பசிக்கொடுமை எப்படி இருக்கும் என்பதை அனுபவ ரீதியாக அறிந்து கொள்ள விழைகின்ற ஓர் தேடல். பசித்திருத்தல் என்பதுடன் சமூக ஒழுக்கத்தை பேணுகின்ற ஒரு பயிற்சியாகவும் நோன்பு அமைந்து விடுகிறது.

நோன்பின் மூலம் ஒருவரது நாக்கு கட்டுப்படுத்தப்பட்டு உண்ணாமல், பருகாமல் மனதை பக்குவமடைய செய்கிறது. கோபத்தை கட்டுப்படுத்தி, சுய கட்டுப்பாட்டை வளர்ப்பதோடு அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுத்துவதோடு, நல்வழி பாதை நோக்கி தன் பயணத்தை செலுத்தவும் நோன்பு உதவுகிறது. உடல், மனம், புத்தி, செயல் என அனைத்தையும் ஒரே கட்டுக்கோப்புடன் செயல்பட செய்யவும், சுய கட்டுப்பாட்டை வளர்க்கவும் ரமலான் நோன்பு உதவி புரிகிறது.
Tags:    

Similar News