ஆன்மிகம்

ஞானமும், கல்வியும் தரும் முருகன் விரதம்

Published On 2017-06-20 10:00 GMT   |   Update On 2017-06-20 10:00 GMT
முருகனுக்கு உகந்த தினத்தில் விரதம் இருந்து வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை பார்க்கலாம்.
வைகாசி விசாகத்தை முருகனின் பிறந்ததினமாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு.



எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும்.

ஆபத்துக்கள் அகலும். வைகாசி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘நம ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.
Tags:    

Similar News