ஆன்மிகம்

தம்பதியர் ஒற்றுமை பெருக பலன் தரும் விரதம்

Published On 2017-04-06 06:05 GMT   |   Update On 2017-04-06 06:05 GMT
ஜென்ம நட்சத்திரமன்று, சிவலிங்கத்தை தழுவியபடி இருக்கும் அம்பாளின் படத்தை வைத்து வழிபாடு செய்து வந்தால் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
சில காரியங்கள், ஜென்ம நட்சத்திரத்தில் செய்தால் சிறப்பான பலனைக் கொடுக்கும். ஆனால் இன்னும் சில காரியங்களை ஜென்ம நட்சத்திரத்தில் செய்யக்கூடாது என்பார்கள். கருத்து வேறுபாடு நிறைந்த தம்பதியர் மீண்டும் அன்னியோன்யமாக வாழ, ஜென்ம நட்சத்திரத்தில் விரதமிருந்து அம்பிகையை வழிபடுவது நல்லது.

தம்பதியர் ஒற்றுமையைப் பலப்பட வைக்கும் ஆலயங்கள் தமிழகத்தில் நிறைய உள்ளன. அவற்றில் அவரவருக்கு ஏற்ற கோவில் எது என்பதைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ற வழிபாடுகளை மேற்கொள்ளலாம். சிவனைப் பிரிந்த உமாதேவி, மாங்காட்டில் தவமிருந்து தன் ஜென்ம நட்சத்திரமன்று ‘மணல்’ சிவலிங்கம் செய்து வழிபட்டார்.



அதன்பிறகே சிவபெருமானுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் கிடைத்தது. எனவே ஜென்ம நட்சத்திரமன்று, சிவலிங்கத்தை தழுவியபடி இருக்கும் அம்பாளின் படத்தை வைத்து விரதமிருந்து வழிபாடு செய்யலாம். காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம்.

சிவகங்கை மாவட்டம் இளையாற்றங்குடி என்ற ஊரிலும் குழையத் தழுவிய காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. பிரிந்தவரை இணைக்கும் ஆற்றல் இந்த அம்மனுக்கும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வரும் ஜென்ம நட்சத்திர தேதியை குறித்து வைத்துக்கொண்டு, இங்கு வந்து விரதமிருந்து வழிபாடு செய்தால் கண்டிப்பாக நற்பலன் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

Similar News