ஆன்மிகம்

வரலட்சுமி விரதம் தோன்றிய கதை

Published On 2017-04-03 08:52 GMT   |   Update On 2017-04-03 08:52 GMT
மகாலட்சுமிக்கு உகந்த வழிபாடுகளில் வரலட்சுமி விரதமும் ஒன்று. இன்று வரலட்சுமி விரதம் தோன்றிய கதையை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். இவள் தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகா லட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள்புரிந்தார்.

‘என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று அருளிய மகாலட்சுமி, சாருமதிக்கு வரலட்சுமி நோன்பு இருப்பதன் வழிமுறையைக் கூறி, அதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதை அப்படியே செய்தாள் சாருமதி. அவள் பெற்ற நன்மைகளை கண்ட பெண்கள், தாங்களும் மகாலட்சுமிக்காக விரதம் இருக்க தொடங்கினர். விரைவில் அந்த நாட்டு மக்கள் முழுவதும் விரதம் இருக்க தொடங்கினர். நாடு சுபீட்சம் அடைந்தது.

பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணுவின் சிறந்த பக்தனாக திகழ்ந்தான். அவனது மனைவி சுரசந்திரிகா. இந்த தம்பதிகளின் மகள் சியாமபாலா. இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.



காலம் கடந்தது. ஒரு சமயம் மகாலட்சுமி தாயார், வயதான சுமங்கலியின் வேடம் தரித்து, சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி, அதை கடைப்பிடிக்கும் படி கூறினார். மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள்.

அப்படி விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, அரசியின் மகள் சியாம பாலா சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். பக்தியுடன் விரதத்தை கடைப்பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள்.

ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோர், வறுமையில் வாடத்தொடங்கினர். விவரம் அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் அவர்கள் செய்த தீவினையால் அது கரியாகி விட்டது. இதையடுத்து சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப்பற்றி சொல்லி பூஜை செய்யும் படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்தாள். அதன் பிறகு இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தது.

Similar News