ஆன்மிகம்

இறைவனை விரதமிருந்து தியானிக்கும் முறை

Published On 2017-02-16 09:19 GMT   |   Update On 2017-02-16 09:19 GMT
மனமானது, பகவான் ஹரியிடம் அன்பு வளரப்பெற்று, பக்திமேலீட்டினால் உருகிக் கசிந்து, இறைவனை நினைத்த மாத்திரத்தில் பொங்கி வரும் ஆனந்தக் கண்ணீரால் அபிஷேகிக்கப்பட்டு, பரிபக்குவ நிலையை அடைகிறது.
மிக பிரகாசமான தாமரை போன்ற முகம், தாமரையிதழின் உட்புறம் போன்ற சிவந்த கண்கள், நீலமேக சியாமள வண்ண திருமேனி, சங்கு, சக்கரம், கதை ஏந்திய கைகள், மஞ்சள் வண்ணப் பட்டாடை, திருமார்பில் துலங்கும் ஸ்ரீவத்ஸம், திருக்கழுத்தில் தொங்கும் கௌஸ்துப மணியின் ஒளி, வனமாலை, முத்துமாலை, கிரீடம், தோள்வளை, கங்கணம், நூபுரம், இடுப்பில் தங்க அரைநாண் ஆகியவற்றுடன், அடியாருக்கு இனியவரும், கண்ணுக்கு மிக அழகிய தோற்றம் கொண்டவருமாக, இறைவனை தியானிக்க வேண்டும்.

மனதை, பகவானின் ஒவ்வொரு அங்கத்திலும், சித்தத்தை லயிக்கச் செய்து தியானிக்க வேண்டும்.

பின், பகவானின் திருவடித்தாமரைகளைத் தியானிக்க வேண்டும். திருவடிகளை, வஜ்ரம், அங்குசம்,கொடி, தாமரை முதலிய அடையாளங்களுடன் இருப்பதாகவும், சிவந்த ஒளி பொருந்திய நகங்களுடன் உடையதாகவும் தியானிக்க வேண்டும்.

பிறகு, மனக்கண்ணால், படிப்படியாக, பகவானின் ஒவ்வொரு அங்கத்தையும், கணுக்கால், முழங்கால் இப்படியாக உற்று நோக்க வேண்டும். பகவானின் அழகிய மல்லிகை மொட்டுக்களைப் போன்ற பற்கள் விளங்கும் புன்முறுவலைத் தியானிக்க வேண்டும் இவ்வாறு புன்முறுவலைத் தியானித்தல் தியானத்தில் எல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த தியானத்தினால், பக்தி மேலிட்டு, மனம் மெதுவாக அடக்கப்படுகிறது. மனமானது, பகவான் ஹரியிடம் அன்பு வளரப்பெற்று, பக்திமேலீட்டினால் உருகிக் கசிந்து,  இறைவனை நினைத்த மாத்திரத்தில் பொங்கி வரும் ஆனந்தக் கண்ணீரால் அபிஷேகிக்கப்பட்டு, பரிபக்குவ நிலையை அடைகிறது.

இந்த நிலையை அடைந்த மனிதன் தன்னுடையதாகப் பிறர் கூறும் சரீரத்தை உணர்வதில்லை. அவன் இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை எய்தி  விடுகிறான்.

தேகம் பூர்வ கர்ம வசத்தால் ஏற்படுவது. பிராரப்த கர்மம் இருக்கும்வரை அது புலன்களுடன் கூடி இருக்கும். ஆனால் யோகத்தில் உயர்ந்த சமாதி நிலையை அடைந்தவன், தேகத்தையும் பிரபஞ்சத்தையும் காண்பதில்லை(அதாவது பொருட்படுத்துவதில்லை). தூக்கத்தில் காணும் கனவை, விழித்தபின் நிஜமல்ல என்று உணருவதைப் போல, யோகத்தில் உயர் நிலையை அடைந்தவர், உலகைக் கனவென்று கருதுவர்.

Similar News